பெய்ஜிங், ஜூலை 28- அண்மைக்காலமாகச் சீனாவின் செல்வாக்கு ஆப்பிரிக்காவில் பெருகிவருவதால், அதைக் குறைக்கும் எண்ணத்திலேயே அமெரிக்க அதிபர் ஒபாமா, தற்போது ஆப்பிரிக்கா பக்கம் கவனம் செலுத்தி வருவதாகச் சீன அரசின் அதிகாரப்பூர்வமான ஊடகம் விமர்சித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் சீனாவின் வர்த்தகச் செல்வாக்கு சமீப காலங்களில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இருதரப்பு வர்த்தகம் 2013-ல் 200 பில்லியன் டாலர்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அதிபராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாகத் தனது தந்தையின் சொந்த நாடான கென்யாவிற்குச் சென்றது அந்நாட்டு மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது.
இதைத் தொடர்ந்து, இப்பயணம் குறித்துச் சீன அரசின் ஊடகம் ஒன்று ‘தி குளோபல் டைம்ஸ்’ என்ற நாளிதழில் தனது கருத்தை வெளியிட்டிருக்கிறது.
அதாவது: “ஆப்பிரிக்காவில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கைக் குலைத்து, குறைந்து போன தனது பழைய செல்வாக்கை மீண்டும் ஆப்பிரிக்காவில் வலிந்து புகுத்தும் முயற்சியாகவே ஒபாமாவின் இந்த ஆப்பிரிக்கப் பயணம் அமைந்திருக்கிறது.” என்றும்-
“ஆப்பிரிக்கா சார்ந்த விசயங்களில் சீனாவை ஒரு எதிரியாகவே பார்க்கிறது அமெரிக்கா.ஆனால், சீனாவின் சீரான, நியாயமான ஆப்பிரிக்கச் செயல்பாட்டுக் கொள்கையைப் போல், சீரான கொள்கை அமெரிக்காவிடத்தில் இல்லை” என்றும் கூறியுள்ளது.