கோலாலம்பூர், ஜூலை 29 – மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று (புதன்கிழமை), சுமார் 190 நாடுகளில் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. விண்டோஸ் 7/8/8.1 இயங்குதளங்களின் ‘பைரேட்’ (Pirate) பதிப்புகள் அல்லாது அதிகாரப்பூர்வ பதிப்புகளை வைத்திருக்கும் பயனர்கள், இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து மேம்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தின் தோல்விக்கு பிறகு, மைக்ரோசாப்ட் ஆற அமர, அணு அணுவாய் உழைத்து உருவாக்கி இருக்கும் இந்த விண்டோஸ் 10, வெளிவர ஏறத்தாழ 3 வருடங்கள் பிடித்திருக்கிறது.
திறன்பேசிகள் சந்தை மட்டுமல்லாது கணினிகளுக்கான சந்தையிலும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக நாதெல்லா, எடுத்துக் கொண்ட முயற்சியின் முக்கிய படிக்கட்டை இன்று கடந்துள்ளார். விண்டோஸ் 8-ல் அதிகம் விமர்சிக்கப்பட்ட குறைகளை நீக்கி, முற்றிலும் புதிய வடிவமாக விண்டோஸ் 10 உருவாகி உள்ளது.
இது ஒரு ஒருங்கமைக்கப்பட்ட இயங்குதளமாகும். கணினிகள், திறன்பேசிகள், தட்டைக் கணினிகள் என அனைத்திற்கும் இந்த இயங்குதளத்தைப் பயன்படுத்தலாம். அந்த அளவிற்கு இணக்கத்தன்மை (Compatibility) கொண்டதாக உருவாகி உள்ளது. எனினும், இதனை தற்போது கணினிகளில் மட்டுமே மேம்படுத்த முடியும். திறன்பேசிகளுக்கான மேம்பாடு, இன்னும் சில மாதங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.
மைக்ரோசாப்ட், இந்த இயங்குதளம் மூலம் பெரிய அளவில் வருவாய் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு களமிறங்கி உள்ளது. விண்ட்டோஸ் 10 இயங்குதளத்தை பொருத்தவரை, மிகவும் பாதுகாப்பானது என மைக்ரோசாப்ட் உறுதி அளித்துள்ளது. மேலும், புத்துருவாக்கம், பாதுகாப்பு தொடர்பான மேம்பாடுகள் என அனைத்தும் வழக்கத்தைவிட வேகமானதாகவும், தன்னிச்சையாகவும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
புதிய பயனர்கள் விண்டோஸ் 10-ஐ, இணையம் மூலமாகவும், மைக்ரோசாப்ட் ஸ்டோர்கள் மூலமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். விண்டோஸ் 10-ன் விலை 119 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.