கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – விண்டோஸ் 10 பயன்படுத்தும் கணினிகளில் இனி அங்கீகாரம் இல்லாத போலியான மென்பொருட்களை பயன்படுத்த முடியாது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அங்கீகாரம் இல்லாத மென்பொருட்கள் என்று இங்கு குறிப்பிடப்படுவது பைரேட் பதிப்புகளைத் தான்.
பெரு நிறுவனங்கள் தவிர பெரும்பான்மையான சிறு நிறுவனங்களும், பயனர்களும் தங்கள் கணினியில் அங்கீகரிக்கப்படாத பைரேட் மென்பொருள் பதிப்புகளைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பதிப்புகளை இயங்குதளங்களும் ஏற்றுக் கொள்கின்றன. இந்த நிலையை மாற்றும் முயற்சியில் தான் மைக்ரோசாப்ட் ஈடுபட்டுள்ளது.
பயனர்களுக்கான உரிம ஒப்பந்தத்தில்(EULA) சமீபத்தில் புதிய மேம்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, விண்டோஸ் 10 கணினிகள், புதிய மேம்பாடுகளின் போது ஆராயப்படும். அப்போது கணினியில் ஏதேனும் பைரேட் பதிப்பு மென்பொருட்கள் இருந்தால் அவை உடனடியாக முடக்கப்படும்.
மைக்ரோசாப்ட் குறிப்பிடும் அங்கீகரிக்கப்படாத மென்பொருட்கள் குறித்து இதுவரை எந்தவொரு விரிவான விளக்கங்களும் வெளியாக வில்லை. எனினும், விண்டோஸ் 10 இயங்குதளத்தில், மைக்ரோசப்ட் தயாரிப்புகளை மட்டுமே பயனர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.