கோலாலம்பூர் – விண்டோஸ் 8 இயங்குதளத்தின் தோல்விக்கு பிறகு, மைக்ரோசாப்ட் ஆற அமர, அணு அணுவாய் உழைத்து உருவாக்கின விண்டோஸ் 10, சமீபத்தில் மிகப் பெரிய அளவில் உச்சத்தை எட்டி உள்ளது.
மாதந்திர செயல்பாட்டில் இருக்கும் விண்டோஸ் 10 சாதனங்களின் எண்ணிக்கை 200 மில்லியனைத் தாண்டி உள்ளதாக மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் வரை 110 மில்லியனாக இருந்த இந்த எண்ணிக்கை அடுத்த மூன்று மாதத்தில் 200 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விண்டோஸ் இயங்குதளங்களில் விண்டோஸ் 10 தான் அதிகபட்ச வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது விண்டோஸ் 7-ஐ விட 140 சதவீத வளர்ச்சியையும், விண்டோஸ் 8-ஐ விட 400 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது” என்று அறிவித்துள்ளது.