கோலாலம்பூர் – தன்னுடைய நிறுவனத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் தான் பார்த்துக் கொண்டிருந்த தனியார் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியை அனினா சாடுடின் ராஜினாமா செய்துள்ளார்.
அதே வேளையில், “இதே போன்று என்று நீங்கள் செய்யப் போகிறீர்கள்?” என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அனினா கேள்வியும் எழுப்பியுள்ளார்.
அம்னோ மகளிர் முன்னாள் உறுப்பினரான அனினா, 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தில் கட்சியின் தலைவர் நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக வழக்குத் தொடுத்தார். அதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இதனிடையே, சில தரப்பினர் தன்னைப் பற்றி கேள்விகள் எழுப்பி தான் பணியாற்றிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகத்திற்கு நெருக்குதல் அளித்து வருவதால், அப்பணியையும் தான் ராஜினாமா செய்துவிட்டதாக அனினா குறிப்பிட்டுள்ளார்.
நஜிப்புக்கு எதிராக தான் எடுத்த முடிவால், தன்னுடைய பணியிடம் பிரச்சனையை எதிர்க்கொள்கிறது என்றும், தான் பணியாற்றும் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு தன்னால் எந்த ஒரு களங்கமும் ஏற்படக்கூடாது என்றும் அனினா எப்எம்டி இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.