கோலாலம்பூர், ஜூலை 30 – துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போதிலும், தாம் வகித்து வரும் அம்னோ துணைத் தலைவர் பதவிக்கு எத்தகைய ஆபத்தும் இருப்பதாகத் தெரியவில்லை என டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் இது தொடர்பில் எதிர்பாராத விஷயங்கள் ஏதும் அரங்கேறும் என தாம் நினைக்கவில்லை என நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறினார்.
அம்னோ தேசியத் தலைவராக இருப்பவர் நாட்டின் பிரதமர் பதவியை ஏற்பதும், அம்னோ துணைத் தலைவருக்கு துணைப் பிரதமர் பதவி அளிப்பதுமே இதுவரை அம்னோவின் மரபாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அம்னோவின் நடப்பு துணைத் தலைவரான மொகிதின், துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
“அம்னோவில் நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறேன். மேலும் கட்சிக்கான எனது கடமைகளை முழுமையாக நிறைவேற்றி உள்ளேன். எனவே எனது பதவிக்கு ஆபத்து இருப்பதாக நான் கருதவில்லை,” என்றார் மொகிதின்.
கல்வி அமைச்சர் பதவியிலிருந்தும் தாம் நீக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையில் இருந்து தாம் நீக்கப்பட காரணமாக இருந்த செயல்பாடுகள் குறித்து கவலைப்படவில்லை என்றார் அவர்.
“மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கேற்ப நான் எப்படிச் செயல்பட வேண்டுமோ, அப்படித்தான் செய்திருக்கிறேன். எனது கடமைகளை நான் சரியாக செய்யவில்லை எனில், மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை சிதைத்ததாகிவிடும். நான் கூறியவை சிலருக்கு எரிச்சலூட்டி இருக்கலாம். எனினும் நான் செய்ததே சரி,” என்று மொகிதின் மேலும் கூறினார்.