இந்தியா, ஜூலை 30- இந்திய மக்களின் மனதில் என்றென்றும் குடியரசுத் தலைவராகவே மதிக்கப்படுகின்ற அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கு இந்தியத் தலைவர்களும், உலகத் தலைவர்களும், கோடான கோடி பொது மக்களும் இரங்கல் தெரிவித்தும், கண்ணீர் அஞ்சலி செலுத்தியும் தங்களது அன்பை மரியாதையை வெளிப்படுத்தி வரும் வேளையில், உலக அளவில் முதலிடத்தில் உள்ளதும் அதிகமான பயன்பாட்டாளர்களைக் கொண்டதுமான கூகுள் இணையதளம் தனது அஞ்சலியை வெளிப்படுத்தியுள்ளது, கூகுள் மீதான மதிப்பை உயர்த்தியுள்ளது.
கூகுள் இணையதளம், தனது முகப்புப் பக்கத்தை ஒவ்வொரு நாளும் விதவிதமாகவும் வித்தியாசமாகவும் வடிவமைத்து வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
‘கூகுள் டூடில்’ என்று அழைக்கப்படும் இந்த முயற்சிக்கு இணையப் பயன்பாட்டாளர்கள் இடையே மிகுந்த வரவேற்புள்ளது.
இந்நிலையில்,அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கூகுள் இணையதளம் நேற்று, கூகுள் டூடில் முகப்பை கருப்பு நிற ரிப்பன் வடிவத்தில் வடைவமைத்து, அதனருகே ‘டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவாக’ என்ற வாசகத்தை எழுதி வெளியிட்டிருந்தது.
இந்த வித்தியாசமான அஞ்சலி இணையப் பயன்பாட்டாளர்கள் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.