சென்னை, ஜூலை 30 – நாட்டின் அதிகபட்ச அதிகாரமுள்ள பதவியில் இருந்த போதும், ஒரு வார்த்தை கூட அதிர்ந்து பேசாது, அமைதியின் உருவாய் இருந்த அப்துல் கலாம், மோடியின் பதவி ஏற்பு விழாவில், ராஜபக்சேவை வேண்டுமென்றே தவிர்த்த நிகழ்வு பற்றிய காணொளி இணைய தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அப்துல் கலாம், மறைந்த அன்று இரங்கல் செய்தியின் போது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்த நிகழ்வு பற்றி நினைவு கூர்ந்தார். அப்போது தான், கலாமின் இந்த செயல் பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரியவந்தது. தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்த அந்த காணொளியை உற்று நோக்கினால், முன்வரிசையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் அப்துல் கலாம் அமர்ந்து இருக்கிறார்.
ராஜபக்சே அனைவருக்கும் வணக்கும் கூறியவாறு இவர்களை நோக்கி வரும் பொழுது, அப்துல் கலாமிற்கு அருகே இருபுறமும் அமர்ந்திருப்பவர்கள் எழுந்து நின்று வணக்கம் கூறுகின்றனர். ஆனால் கலாம், வைகோ கூறியது போல், ஒரு இம்மி அளவும் அசையாமல் அதே இடத்தில் அமர்ந்து இருக்கிறார். ராஜபக்சே வருகையின் போது, கறுப்புக் கொடிகளுடன் பலர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினாலும், ராஜபக்சேவின் முகத்திற்கு நேராக, கலாம் காட்டிய எதிர்ப்பு அவருக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பது அந்த காணொளியை பார்க்கும் போது தெளிவாகத் தெரிகிறது.
அந்த காணொளியைக் கீழே காண்க:
http://www.youtube.com/watch?v=MxTXO0di9nA