ராமேஸ்வரம், ஜூலை 30- அப்துல்கலாமின் இறுதி சடங்கு பேய்க்கரும்புத் திடலில் நடைபெறுகிறது.
அப்துல் கலாமிற்கு இறுதி அஞ்சலி செலுத்த, முக்கியப் பிரமுகர்கள் பலரும் பேய்க்கரும்புத் திடலுக்கு வந்து குவிந்துள்ளனர்.
பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ரோசய்யாவுடன் வந்து, கலாம் நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி டில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவே மதுரை வந்து தங்கியிருந்து, அங்கிருந்து இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்து, பின்னர் பேய்க்கரும்புத் திடலுக்கு நடந்து வந்து கலாமிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
முதல்- அமைச்சர் ஜெயலலிதா, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் வந்து அஞ்சலி செலுத்தமுடியாததற்கு வருத்தம் தெரிவித்தார். அவர் சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம், பழனியப்பன், சுந்தரராஜன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா ஆகியோர் நேற்றே ராமேசுவரம் வந்து அஞ்சலி செலுத்தியதோடு, இன்று காலை இறுதிச் சடங்கு நடைபெறும் திடலில் தேவையான ஏற்பாடுகளை முன்னின்று செய்தனர்.
அப்துல்கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் உம்மன்சாண்டி, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா,ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்-மந்திரி ரெங்கசாமி , மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோரும் பேய்க்கரும்புத் திடலுக்கு வந்து குவிந்துள்ளனர்.
இதேபோல் தமிழகத் தலைவர்கள் மு.க.ஸ்டாலின், வைகோ, விஜயகாந்த், இளங்கோவன், தமிழிசை சவுந்தரராஜன்,அன்புமணி ராமதாஸ்,ஜி.ராமகிருஷ்ணன், நல்லக் கண்ணு, வசந்தகுமார் முதலிய அரசியல் பிரமுகர்களும்,கவிஞர் வைரமுத்து, நடிகர் விவேக், வடிவேலு, சிவகார்த்திகேன், தாமு முதலான திரையுலகப் பிரபலங்களும் கலாமிற்கு இறுதி அஞ்சலி செலுத்த பேய்க்கரும்புத் திடலுக்கு வந்து குவிந்துள்ளனர்.