Home நாடு “நீக்குவதற்கு 2 மணி நேரம் முன்பு தான் பிரதமர் தகவல் சொன்னார்” – மொகிதின்

“நீக்குவதற்கு 2 மணி நேரம் முன்பு தான் பிரதமர் தகவல் சொன்னார்” – மொகிதின்

583
0
SHARE
Ad

Tan-Sri-Muhyiddin-Yassin1கோலாலம்பூர், ஜூலை 30 – அமைச்சரவையில் இருந்து தன்னை நீக்கப் போவது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், அதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகத்தான் தமக்கு தகவல் தெரிவித்ததாக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறினார்.

தன்னை புத்ரா ஜெயாவுக்கு வருமாறு பிரதமர் அழைத்ததாகவும், நேரில் சில விஷயங்கள் குறித்து விவாதித்ததாகவும் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது மொகிதின் தெரிவித்தார்.

“என்னை எதற்காக அழைத்தார் என கேட்டேன். மேலும் அமைச்சரவை மாற்றத்துக்கும் எனக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா எனக் கேட்டபோது பிரதமர் அதை ஆமோதித்தார். பிறகு என்னிடம் ஏதாவது தெரிவிக்க விரும்புகிறாரா? எனக் கேட்டேன். எனினும் என்னிடம் விவரம் தெரிவிக்க அவர் சங்கடப்பட்டார். பிறகுதான் புதிய அமைச்சரவைப் பட்டியலில் எனது பெயர் இல்லையா? என அவரிடம் கேட்டேன். அதையும் அவர் ஆமோதித்தபோது, நன்றி என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்,” என்றார் மொகிதின்.

#TamilSchoolmychoice

தன்னை அமைச்சரவையில் இருந்து நீக்கினாலும், அம்னோ துணைத் தலைவர் என்ற வகையில், பிரதமர் நஜிப்பை தொடர்ந்து ஆதரிக்கப் போவதாகக் குறிப்பிட்ட அவர், கட்சித் தலைவரையும் கட்சியையும் ஆதரிக்க வேண்டியதே தமது கடமை என்றும், அதை தொடர்ந்து செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.

“என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கியதால், எனது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்திருக்கலாம். எனினும் கட்சிக்கு ஆற்ற வேண்டிய கடமையை உணர்ந்து, அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சில நடவடிக்கைகள் எனக்கு ஏற்பட்டுள்ள நிலைமை என்றாலும், உண்மையில் அவை என்னுடன் சம்பந்தப்பட்டவை அல்ல. மாறாக கட்சி மற்றும் நாட்டின் எதிர்காலத்துடன் தொடர்புடையவை,” என்றார் மொகிதின்.

அமைச்சரவை மாற்றம், பொது கணக்குக் குழு மற்றும் அட்டர்னி ஜெனரல் மாற்றம் ஆகியவற்றால் 1எம்டிபி தொடர்பான விசாரணை பாதிக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், புதிய அட்டர்னி ஜெனரல் விசாரணையை தொடர்ந்து சரியான பாதையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

தனது எதிர்காலம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த மொகிதின், “அடுத்த நடவடிக்கைக்கு முன்னர் என்னைப் பக்குவப்படுத்திக் கொள்வேன். இப்போதுதான் சில விஷயங்கள் நடந்துள்ளன. எனவே அடுத்து அறிவுப்பூர்வமாக, கடமையை உணர்ந்து முடிவெடுக்க அவகாசம் கொடுங்கள்” என்றார்.

தற்போதுள்ள சூழலில் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் மொகிதின் மேலும் கூறினார்.