Home நாடு மஇகா: கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டிலிருந்து விலகிக் கொண்டார் பிரகாஷ் ராவ்!

மஇகா: கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டிலிருந்து விலகிக் கொண்டார் பிரகாஷ் ராவ்!

971
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 30 – கடந்த ஜூலை 13ஆம் தேதி மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை எதிர்த்து டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் தரப்பினர் நாட்டின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்திருப்பதாகவும், இந்த மேல்முறையீட்டை முன்னாள் ஜோகூர் மாநில மஇகா தலைவரும், பழனிவேலுவின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வருபவருமான டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் சமர்ப்பித்துள்ளதாகவும் பழனிவேலுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

A-Prakash-Rao1இருப்பினும் இந்த மேல்முறையீட்டில் இருந்து மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளரான ஏ.பிரகாஷ் ராவ் (படம்) விலகிக் கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து செல்லியல்.காம், பிரகாஷ் ராவைத் தொடர்பு கொண்டபோது, கூட்டரசு நீதிமன்றத்திற்கான மேல் முறையீட்டிலிருந்து தான் விலகிக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தினார். மேல் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு வெளியான ஜூலை 13க்குப் பின்னர் தனது முடிவை ஏற்கனவே மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி விட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

சங்கப் பதிவகத்திற்கு எதிராக சீராய்வு மனு (Judicial Review) ஒன்றைச் சமர்ப்பித்து வழக்கு தொடுத்த ஐந்து பேரில் பிரகாஷ் ராவ் ஒருவராவார்.

#TamilSchoolmychoice

“நீண்ட காலமாக நான் பொது இயக்கங்களிலும், ஸ்ரீ முருகன் நிலையம்  போன்ற கல்வி இயக்கங்களிலும் இணைந்து பணியாற்றி வந்தேன். அதே சமூக உணர்வுடன்தான் மஇகாவிலும் கடந்த 1990இல் சேர்ந்தேன். கடந்த 2013 மத்திய செயலவை உறுப்பினருக்கான தேர்தலில் வெற்றி பெற்ற என்னை தலைமைச் செயலாளராக  பழனிவேல் நியமித்தார். அந்தப் பதவியில் இருந்து சேவையாற்ற எனக்கொரு வாய்ப்பளித்த அவருக்கு இந்த வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மஇகா தொடர்பில் வழக்கு விவகாரங்கள் எழுந்தபோது, கட்சியின் தலைமைச் செயலாளர் – பொது அதிகாரி என்ற முறையில் நான் ஈடுபட நேர்ந்தது. நான் எப்போதும் நான் சார்ந்துள்ள குழுவோடு சார்ந்து செயல்படும் தன்மை கொண்டவன். அதன் காரணமாக, தேசியத் தலைவரான பழனிவேலுவின் தலைமையில் இயங்கிய குழுவோடு இணைந்து எனது கடமையைப் புரிந்தேன். ஆனால், ஜூலை 13இல் மேல் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதும், இதற்கு மேலும் நீதிமன்றப் போராட்டத்தைத் தொடர்வதில் எந்த ஒரு பலனும் இல்லை என்பதை உணர்ந்தேன்” என்றும் ஏ.பிரகாஷ் ராவ் செல்லியலிடம் தெரிவித்தார்.

Prakash-Rao-440x215மஇகா தலைமைத்துவப் போராட்டத்தில் தான் தனிப்பட்ட முறையில் கட்சிப் பதவிகளை இழந்து, சில இழப்புகளைச் சந்தித்திருந்தாலும், அதனை உற்சாக உணர்வுடனேயே அணுகுவதாகவும் பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.

“நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். மஇகா மூலமாக இந்திய சமுதாயத்திற்கு நாம் எவ்வாறு உதவ முடியும், முன்னேற்ற முடியும் என்பது குறித்து இனி சிந்திப்போம், செயல்படுவோம். இந்த கோணத்தில் பார்க்கும்போது, நமது அரசியல் போராட்டத்தை “இரண்டு தேசியத் தலைவர்கள் – இரண்டு தேர்தல்கள்” என்ற ரீதியில் இனியும் தொடர்வதில் எந்தவித அர்த்தமோ, பலனோ இல்லை என்பதுதான் எனது முடிவாகும். மஇகா கிளைகளும் இத்தகைய குழப்பத்தையும் போராட்டத்தையும் இனியும் விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. கட்சி நலனுக்காகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும் நமது சொந்த அரசியல் கருத்து வேறுபாடுகளையும், எதிர்ப்புகளையும் ஒதுக்கி வைத்து விட்டு செயல்படுவதுதான் நல்லது என எனக்குப் படுகின்றது. உயர் நீதிமன்ற, மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புகளுக்குப் பின்னரும் நீதிமன்றப் போராட்டங்களை இனியும் தொடர்ந்து கொண்டிருப்பது நேரம், பணம், நமது சக்தி என அனைத்தையும் விரயமாக்கும் செயல் என்பதோடு அதனால் பலனும் ஏதுமில்லை என்பதுதான் எனது உறுதியான கருத்து. எனது கண்ணோட்டத்தில், கூட்டரசு நீதிமன்றத்தின் மேல்முறையீட்டுத் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் அதனால், மஇகாவின் அரசியல் நிலைமை எந்தவிதத்திலும் மாறப்போவதில்லை” என்றும் பிரகாஷ் ராவ் வலியுறுத்தினார்.

அதே வேளையில், செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் பழனிவேலு தனது அமைச்சர் பதவியை இழந்ததற்கும், தனது முடிவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் பிரகாஷ் ராவ் தெளிவுபடுத்தினார்.

“அமைச்சரவை மாற்றங்கள் என்பது பிரதமரின் தனி உரிமை. நான் கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டிலிருந்து விலகிக் கொள்ளும் எனது முடிவை ஜூலை 13க்குப் பின்னர் உடனடியாகத் தெரிவித்து விட்டேன். எனவே, பழனிவேல் அமைச்சர் பதவியை இழந்ததற்கும் எனது முடிவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை” என்றும் பிரகாஷ் ராவ் விளக்கினார்.