ராமேஸ்வரம், ஜூலை 30- அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ஆம் தேதியைத் தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பிரதமர் மோடியிடம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரடியாகக் கடிதம் கொடுத்துள்ளார்.
அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்திருந்தார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவர்களும் வந்திருந்து கலாமின் நல்லுடலைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுதார்.
இறுதிச் சடங்கின் போது கலாமின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூற மோடி வந்த போது, எதிரில் வந்த விஜயகாந்தைப் பார்த்து வணங்கி அவரது தோளில் தோழமையோடு கையைப் போட்டார் மோடி. அப்போது மைத்துனர் சுதீஷிடம் இருந்த ஒரு மனுவை வாங்கி அதைப் பிரதமர் மோடியிடம் கொடுத்தார் விஜயகாந்த்.
அதைப் பெற்றுக் கொண்ட மோடி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
மோடியிடம் சமர்ப்பிக்கப்பட்ட மனுவைப் பற்றிய செய்தி, தேமுதிகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் பதவிக்கே புது அடையாளத்தை உண்டாக்கியவர் கலாம் அவர்கள். மேலும் அவர், தம் வாழ்நாள் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சமூகத்துக்காகத் தொண்டாற்றியவர். எனவே, இளைஞர்கள் சமுதாயம் அவரது பிறந்த நாளைத் ‘தேசிய மாணவர் தினமாக’க் கொண்டாடத் தக்க வகையில் நடவடிக்கை எடுக்கும்படி அம்மனுவில் விஜயகாந்த் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.