சிரம்பான், ஜூலை 31 – 1எம்டிபி குறித்து முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பேசுவதாக வெளியான காணொளிப் பதிவுக்கும் தமக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என நெகிரி மந்திரி பெசார் டான்ஸ்ரீ முகமட் ஹாசன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அந்தக் காணொளிப் பதிவின் இடையிடையே ஒலிப்பது தமது குரல் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
“எனது குரலுடன் சேர்த்து அந்தக் காணொளி பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அந்தக் காணொளிப் பதிவுக்கும் எனக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை. இது எனக்கும் அம்னோ தலைவர்கள் மற்றும் அரசாங்கத்துக்கும் இடையே மோதலை ஏற்படுத்துவதற்கான முயற்சி” என்றார் முகமட் ஹாசன்.
தாம் மொகிதினுக்கு ஆதரவாக இல்லையென்றாலும் கூட, செராஸ் அம்னோ கூட்டத்தில் 1எம்டிபி குறித்து மொகிதீன் உண்மையைத்தான் சொன்னார் என அந்தக் காணொளிப் பதிவின் இடையே தனிநபர் ஒருவர் கூறுவது கேட்கிறது.
இதையடுத்து, “பிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும் என கோராமல், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ‘நாங்கள்’ உதவத் தயார்” என்றும் அந்த தனிநபர் மேலும் கூறுகிறார். எனினும் ‘நாங்கள்’ என்று கூறும் அவர் எந்தவொரு அரசியல் கட்சியையோ, குழுவையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
மேலும் 1எம்டிபியின் பல பில்லியன் ரிங்கிட் பணத்திற்கு ஏற்பட்ட கதி குறித்து அறிவதில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முனைப்பாக இருப்பதாகவும் அந்த ஆடவர் காணொளிப் பதிவில் கூறுகிறார்.
“அந்த நபர் ஐந்தாம் படிவம் படித்து முடித்த பின்னர் தனது தந்தை ஆசிரியரானார் என கூறியுள்ளார். எனக்கும் காணொளிப் பதிவுக்கும் தொடர்பில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ஏனெனில் எனது தந்தை ஆசிரியரல்ல. மக்களைக் குழப்ப சிலர் செய்த வேலை இது. எனினும் மக்கள் இத்தகைய பொய்களை நம்பமாட்டார்கள் எனக் கருதுகிறேன்,” என்று முகமட் ஹாசன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னர் பிரதமருக்கு நெகிரி செம்பிலான் அம்னோ முழு ஆதரவை நல்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.