Home நாடு “மஇகாவில் ஏற்பட்ட குழப்பத்திற்கும் – பழனிக்கு ஏற்பட்ட குழப்பத்திற்கும் காரணமானவர்கள் யார்?” – பெரு.அ.தமிழ்மணி கண்ணோட்டம்

“மஇகாவில் ஏற்பட்ட குழப்பத்திற்கும் – பழனிக்கு ஏற்பட்ட குழப்பத்திற்கும் காரணமானவர்கள் யார்?” – பெரு.அ.தமிழ்மணி கண்ணோட்டம்

806
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 31 – (மஇகாவில் அண்மையக் காலமாக ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள் குறித்து மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான  ‘எழுத்தாண்மை ஏந்தல்’ பெரு.அ.தமிழ்மணி  வழங்கும் கண்ணோட்டம்) 

Tamil Maniம இ காவில் டத்தோஸ்ரீ ஜி.பழனி வேல் கூடாரம் கிட்டத்தட்ட காலியாகி விட்டது. அவரின் நம்பிக்கைக்குரிய பல பூனைகள் இரண்டு வாரங்களுக்கு முன்பே மதில் மேல் ஏறி அமர்ந்துக் கொண்டிருந்தாலும்-

பிரதமர் நஜிப்பின் அமைச்சரவையில் இருந்து அவர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ,ஒவ்வொரு பூனையும் இடைக்காலத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தை நோக்கி தாவி வரத் துவங்கியுள்ளன.

#TamilSchoolmychoice

இந்த இடமாற்றம், இந்த ஆள் தடுமாற்றமெல்லாம், இம்மாதம் 13ஆம் தேதி அப்பீல் வழக்கில், பழனி தோல்வி அடையும் போது நிச்சயம் நடக்கும், அணிமாறி வரும் சூழ்நிலை நிச்சயம் உருவாகும் என்று நமது அரசியல் ஆய்வுக் கண்ணோட்டத்தில் திட்டவட்டமாக எழுதியிருந்தோம்.

அந்தக் கணிப்பு அல்லது நமது பார்வை எப்போதும் வீணாவது இல்லை என்று சொல்லும் அளவுக்கு பழனியின் கூடாரம் தற்போது நாள்தோறும் காலியாகிக் கொண்டிருக்கிறது.

Palanivel-new-Featureபழனியின் நிலையோ மிகவும் பரிதாபமாகி விட்டது. இங்குதான் “அரசியலில் நி்ரந்தர நண்பனும் இல்லை! நிரந்தர விரோதியும் இல்லை!” என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

இந்த எதிர் வினை நடவடிக்கையால் பழனி சரியான பாடத்தை படிப்பினையை நிச்சயம் படித்திருப்பார். அவரது அரசியல் சூழ்ச்சியால் தனக்குள் போட்டுக்கொண்ட வட்டத்தில் –

அவராலேயே சரியாக வட்டமடிக்க முடியாமல், அடிக்கடி விழுந்து விழுந்து எழுந்ததை அவர் இப்போது உணர்ந்தும் இருப்பார்.

அரசியல் என்பது கெட்டிக்காரத்தனத்தின் வெளிப்பாடுதான் என்றாலும் இதில் தனது எதிரியை மூட்டைக்கட்டி அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு முன்னுரிமை வழங்கப்படுமேயானால், அந்த மூட்டைக்குள் திட்டமிட்டவரையும் கட்டிப் போட வேண்டி வரலாம் என்பதையும் ஒருகணம் யோசித்தும் இருக்க வேண்டும்.

“இங்கு தான் கொல்! அல்லது கொல்லப்படுவாய்!” என்ற ஹிட்லரின் அடக்கு முறைத் தத்துவம் சில வேளைகளில் வெற்றி பெறுகிறது அல்லது பல வேளைகளில் தோல்வியும் அடைந்தும் விடுகிறது.

Najib-Semenyih-1MDB2013ல் பிரதமர் முன் செய்துக்கொண்ட ஒப்பந்தப்படி 2016 மார்ச் மாதம் பழனி விலகிக் கொள்வதாக இருந்தால், அதன்படி அவர் செயல்பட்டிருக்க வேண்டும். அதைப் பின்பற்றி நடந்து இருக்க வேண்டும். அல்லது இன்னொரு தவணைக்குரிய வாய்ப்பை ஒரு பேச்சு வார்த்தை மூலம் பெற்றிருக்க வேண்டும் – அல்லது பேசிய பேச்சு வார்த்தையை திட்டவட்டமாக முறித்திருக்க வேண்டும். இதில் எதையும் செய்துக் கொள்ளாமல், தனக்குரிய அணியை அமைத்ததும், அந்த அணியின் வெற்றிக்காக தேர்தலை முறைகேடாக நடத்தியதும்–

அப்படி தனக்கென ஓர் அணியை அமைத்தப் பிறகு, அவரே தேர்தல் குழுவுக்கு தலைவராகயிருந்ததும்,

அதன் பின்னர் அந்த தேர்தலில் முறைகேடுகள் என்று அதிரடியான குற்றச்சாட்டுகள் வெளிப்பட்ட போது —

அதை கட்சிக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள முன்னுரிமை வழங்காமல், சங்கங்களின் பதிவு இலாகா பார்வை வரைக்கும் விசுவரூபம் எடுக்க அனுமதித்ததும்–

Datuk-Seri-Dr-S.Subramaniamஅதன்பின் பதிவு இலாகா கண்டறிந்த குற்றச்சாட்டுகளுக்கு தக்க தற்காப்பு முன்நடவடிக்கையை மேற்கொள்ளாமல், தனது தவற்றை மேலும் பலவீனமாக்கும் வகையில் —

பதிவு இலாகாவை நீதி மன்றத்திற்கு இழுத்ததும் பின்னர் ஒரு தோல்விக்குப் பிறகு அடுத்தடுத்த நடந்த தோல்விக்குப் பிறகும் அப்பீலுக்குப் போவதும் வருவதுமாக இன்றுவரை நீதிமன்றம் போய்க் கொண்டு இருப்பதும் என்ற–

பழனியின் இப்படி ஒவ்வொரு நடவடிக்கையும் அல்லது அவரின் கூட்டணியினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பலவீனமான நடவடிக்கைகளினாலும் அதன் விளைவின் இறுதி வடிவம், பழனியை அரசியலில் இன்று அநாதையாக்கியிருக்கிறது.

அதன் விளைவு அவரின் கூடாரத்தில் நேற்று வரை நின்றவர்கள் ஒதுங்கியவர்கள் எல்லாம் டாக்டர் சுப்ராவின் கூடாரத்தை நோக்கி வரத் துவங்கியுள்ளனர்.

பேச்சு வார்த்தைகளின் மூலம் நேரடி முகம் காட்டாமல் இன்னொரு ஆளின் மூலம் முகத்தை பூட்டியும் மறைமுக பேரம் பேசியும் வரும் பட்டியலுக்கிடையேதான் சுந்தர் சுப்ரமணியம், குமார் அம்மன் உள்ளிட்ட சிலரும் டாக்டர் சுப்ரா பக்கம் சேர்ந்து கொண்டுள்ளனர்.

இதே நிலைப்பாட்டில்தான் சில மாநிலத் தலைவர்கள், தொகுதித் தலைவர்கள், நூற்றுக் கணக்கான கிளைத்தலைவர்கள், டாக்டரை நோக்கி பயணப்படத் துவங்கியுள்ளனர்.

இப்படிப்பட்ட அரசியல் அலை வீச்சுகளுக்கிடையே, சில கிளைத்தலைவர்கள். “அரசனை நம்பி புருசனை கைவிட்டுவிட்டோமேயென்று” தலையில் கையை வைத்து அழவும் தொடங்கியுள்ளனர்.

அதோடு மட்டுமல்ல, “அவரால் நான் கெட்டேன்” என்றும் “இவரால்தான் நீ கெட்டாய்” என்று ஒருவரை நோக்கி, இன்னொருவர் கையை உயர்த்திப் பிடிக்கவும் தயங்கவில்லை.என்றே தெரிகிறது.

இத்தகைய ஆதங்கத்தின் வெளிப்பாடு நியாயத்தின் பக்கம் இல்லாமல்

போவதற்கு காரணமே, சுயநல அரசியல்தான். இந்த சுயநலத்தின் வெளிப்பாடு

என்பது தனக்குரிய இடத்தை பிடிக்க மற்றவர்களைத் தள்ளிவிட்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான்.

அதனால் அதற்குரிய பின்னணியில் நடத்தப்பட்டதுதான் பழனியின் ஒவ்வொரு நடவடிக்கையுமாகும்.

அந்த மூவர் யார்?

இந்த பின்னணிக்கு எடுத்த எடுப்பிலேயே பழனிதான் காரணம் என்று  அறியப்பட்டாலும் அந்த பின்ணணிக்கு முன்னணியாக இருந்தவர்கள் மூவர்!

Dato S.Balakrishnanஇவ்வளவு குழப்பத்திற்குப் பிறகு திடீரென்று டான்ஸ்ரீ பட்டம் பெற்ற பாலகிருஷ்ணன், அடுத்த நபர் தெலுக்கெமாங் டத்தோ சோதிநாதன், இன்னொருவர் கோலாலம்பூர் ஏ.கே.இராமலிங்கம் இந்த மூவருமே பழனியை சுற்றி விட்ட பயங்கர சூத்திரதாரிகள்.

பதிவு இலாகா தேர்தல் முறைகேட்டிற்குப் பிறகு, மறுதேர்தலுக்கு உத்தரவு பிறப்பித்த போது, 2009 ஆம் ஆண்டுக்கான நிர்வாகமே பொறுப்பேற்று தேர்தலை் நடத்த வேண்டும் என்று விடுத்த ஆணையை இந்த மூவரும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

Dato S.Sothinathanபிரதமர் தலையிட்டு ஒரு சுமுகமான சூழ்நிலைக்கு கொண்டு வந்து, மறுதேர்தலுக்கு உத்தரவு விடுத்த பிறகும் பழனி பிரதமர் முன் ஒப்புக்கொண்ட ஒப்புதல்படி நடந்து கொள்ள முடியாமல் போனதறகு இந்த மூவருமே காரணமாகும். இந்த மூவரும் அடிக்கடி பழனியை குழப்பி விட்டுக்கொண்டே இருந்தனர்.

அதற்கு காரணமே! இந்த மூவரும் 2009 ஆம் ஆண்டிற்கான நிர்வாகப் பட்டியலில் இல்லாமல் இருந்ததுதான். 2013ஆம் ஆண்டுத் தேர்தல் முறைகேட்டில் முடிந்து போனதால், அத்தேர்வில் தேர்வு பெற்று வந்ததாக அறிவிக்கப்பட்ட இந்த மூவரும் தங்கள் பதவியை இழந்து விட்டதினால், இவர்கள் 2009 ஆம் ஆண்டிற்கான நிர்வாகத்தை ஏற்க மறுத்தனர்.

K.Ramalingam MIC Batuஅதற்காக – இவர்களுக்குப் பின்பாட்டுப் பாட புறப்பட்ட பழனி, இறுதிவரை 2009 ஆம் ஆண்டிற்கான நிர்வாகத்தை எதிர்க்க வேண்டியதாயிற்று. அப்படி எதிர்க்கத் துணிந்த பழனி, பதிவு இலாகாவை நீதிமன்றத்தில் கொண்டுப்போய்

நிறுத்தினார். இது மிகவும் ஆபத்தான அணுகு முறையென்று தெரிந்தும், இந்த மூவரின் வலியுறுத்தலுக்கு் அடிபணிந்து பழனி தலை சாய்க்க வேண்டியதாயிற்று.

அதன் விளைவால்தான் – பழனியின் கட்சித் தலைவர் பதவி, அமைச்சர் பதவி வரை இன்றைக்கு் இழக்க வேண்டிய நிலைமையாகிவிட்டது.

இயல்பாகவே எல்லா விசயங்களிலும் பலரை குழப்பிக்கொண்டிருக்கும் பழனியையே – இந்த 2009 ஆம் ஆண்டுக்கான நிர்வாக விசயத்தில் அவரை பெரும் குழப்பத்திற்கு சுத்திவிட்ட பெருமகன்களாக இந்த மூவரும் திகழ்கிறார்கள்.

இந்நிலையில், சங்கப் பதிவகம் மீது வழக்கு தொடுத்த 5 பேரில் ஒருவரான ஏ.பிரகாஷ் ராவ் கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

பழனிவேல் தரப்பில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மேலும் பல முக்கியத் தலைவர்களும் தற்போது டாக்டர் சுப்ரா தரப்பில் இணைந்து கொள்ள மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர் என மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-பெரு.அ.தமிழ்மணி

(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்குச் செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.

இந்தக் கட்டுரையையோ, அல்லது அதன் பகுதிகளையோ மறுபிரசுரம் செய்ய வேண்டுமென்றால், கட்டுரையாளரை நேரடியாகத் தொடர்பு கொண்டு அனுமதி பெறவேண்டும்.

 தமிழ்மணியின் மற்ற எழுத்துப் படிவங்களை maravan madal tamil mani என்ற முகநூல் (பேஸ்புக்)  அகப்பக்கத்தில் காணலாம். அவரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

 wrrcentre@gmail.com