Home கலை உலகம் திரைவிமர்சனம்: “ஆரஞ்சு மிட்டாய்” – இனிப்புமில்லை, புளிப்புமில்லை – போரடிக்கும் பயணம்!

திரைவிமர்சனம்: “ஆரஞ்சு மிட்டாய்” – இனிப்புமில்லை, புளிப்புமில்லை – போரடிக்கும் பயணம்!

654
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 31 – வித்தியாசமான நடிப்பை வழங்குபவர், மிகுந்த கவனத்துடன் படங்களைத் தேர்ந்தெடுத்துப் பண்ணுபவர், என்றெல்லாம் தமிழ்த் திரையுலகில் பெயர் பெற்ற விஜய் சேதுபதியே தயாரித்திருக்கும் படமாயிற்றே – முதியவர் தோற்றத்தில் தனி முத்திரையைப் பதித்திருப்பார் – என்றெல்லாம் எதிர்பார்ப்புடன் சென்று அமர்ந்தால், பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கும் படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’.Orange Mittai -poster 1

கதை – திரைக்கதை

ஒரு மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை வாகனத்தில் (ஆம்புலன்ஸ்) மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் சத்யா கதாபாத்திரத்தில் ரமேஷ் திலக். சமீபத்தில் வந்த காக்கா முட்டை முதற்கொண்டு பல படங்களில் ஏற்கனவே கலகல நடிப்பை வழங்கி கலக்கி வருபவர் இவர்.

#TamilSchoolmychoice

அந்த வாகனத்தைச் செலுத்தும் ஓட்டுநர் ஆறுமுகம் (ஆறுமுகம் பாலா). முக்கியமான வேடத்தில் புதிய அறிமுகம். ஒரு முறை, நகருக்கு ஒதுக்குப் புறமான ஓரிடத்தில் இருந்து  ஒரு முதியவருக்கு மாரடைப்பு என்றும் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் அவசர அழைப்பு வர, புறப்பட்டுச் செல்லும் ரமேஷ் திலக், வாகன ஓட்டுநர் ஆறுமுகம் இருவருக்கும் இடையில் ஏற்படும் அனுபவங்களில் தொடங்குகின்றது படம்.

Vijay-Sethupathy-Orange Mittaiமாரடைப்பு ஏற்பட்ட முதியவர் கைலாசம்தான் விஜய் சேதுபதி. அவரை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியில் ஏற்படும் சில சம்பவங்கள்தான் கதை.

இடையில் ரமேஷ் திலக்கின் காதல் – அவரது கல்யாண முயற்சிகளில் ஏற்படும் இடையூறுகள் என்ற கிளைக் கதையின் ஊடே பயணிக்கின்றது திரைக்கதை.

தமிழ்ப்பட வழக்கத்தைப் போன்று பாடல்கள் ஏதும் இடையிடையே இல்லையென்றாலும், சுவாரசியமில்லாத காட்சிகள், சுளீரென்று உரைக்க வேண்டிய வசனங்கள் மொக்கையாக இருப்பது, திருப்பங்கள் அதிகமில்லாத கதை என படு போரடிப்பான பயணமாக அமைந்து விட்டது இந்தப் பயணம்.

இலக்கு இல்லாத திரைக்கதை

விஜய் சேதுபதியை மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்த பின்னரும், அவர் சிகிச்சை பெற இஷ்டமில்லை என்று கூறிக் கொண்டு மீண்டும் வீட்டுக்கே திரும்புவேன் என்று அடம் பிடிக்கின்றார்.

அவ்வளவு தூரம் அவரைக் கஷ்டப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து விட்டு பிறகு மீண்டும் அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கே திரும்புவது நம்பும்படியும் இல்லை – அதனால் அவரது கதாபாத்திரம் மீது அனுதாபமும் பிறக்கவில்லை. அவர் ஏன் அப்படி நடந்து கொள்கின்றார் என்பதற்கான போதிய விளக்கமும் இல்லை.

orange-mittai - poster 2 -போரடித்தால், ஜாலியாக ஆம்புலன்ஸ் வண்டியை தொலைபேசியில் அழைத்து,  ஜாலியாக அவர்களுடன் பயணம் போய்வருவேன் என விஜய் சேதுபதி கூறுவது எல்லாம் கொஞ்சம் ஓவர்.

அதேபோல் அவருக்கும் அவரது மகனாக வரும் கருணாகரனுக்கும் இடையில் தந்தை-மகன் உறவு முறிவு ஏன் என்பதற்கும், கருணாகரன் ஓரிரு வார்த்தைகளில் மனம் மாறி மீண்டும் தந்தையிடம் இறுதியில் ஏன் வந்து சேருகின்றார் என்பதற்கும் வலுவான சம்பவ ஆதாரங்கள் இல்லாதது திரைக்கதையின் பெரிய ஓட்டை.

ரமேஷ் திலக் அப்பா இறந்து விட்டதாகவும், அவர் உயிரோடு இருக்கும்போது ரமேஷ் அவரை ஒழுங்காக கவனித்துக் கொள்ளவில்லை என்றும் காட்டுகின்றார்கள். ஆனால், அதற்கான சம்பவங்கள் என்ன என்பது குறித்து சொல்லப்படாததால் திரைக்கதையின் அந்தப் பகுதிகள் மனதில் ஆழமாகப் பதியவில்லை.

விஜய் சேதுபதி – ரமேஷ் திலக் – ஆறு பாலா

திரையுலகில் தனது கதாநாயக இடம் உச்சத்தில் இருக்கும் இந்தத் தருணத்திலேயே, படம் முழுக்க முதியவர் பாத்திரத்தில் வருவதற்கு விஜய் சேதுபதிக்கு நிறைய துணிச்சல் இருக்கின்றது. அப்படிப்பட்ட கதாபாத்திரத்தைக் கொண்ட படத்தைச் சொந்தமாகத் தயாரிப்பதற்கும் அதைவிட அதிக துணிச்சல் வேண்டும்.

orange-mittai-vijay sethupathy-ramesh thilak -தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தைக் கச்சிதமாக செய்திருக்கின்றார் என்றாலும், வலுவில்லாத கதை, சம்பவங்களினால் அவரது பங்களிப்பு வீணாகி விடுகின்றது. இறுதிக் காட்சியில் சர்க்கஸ் பபூன் வேடத்தில் வந்து நடனமும் ஆடிக் காட்டுகின்றார். படத்தில் அவருக்கு ஜோடியும் இல்லை.

ரமேஷ் திலக் ஏறக்குறைய கதாநாயகன் பாத்திரம். விஜய் சேதுபதி படம் முழுக்க முதியவராகவே வருவதால், அவரைவிட கூடுதலாக வாய்ப்பு ரமேஷ் திலக்குக்குத்தான். காதலியுடன் பிரச்சனை, கல்யாணத்தில் ஏற்படும் முட்டுக்கட்டை சம்பவங்களினால் ஏற்படும் மன பாதிப்புகள் என்பதையெல்லாம் நன்கு வெளிப்படுத்தியிருக்கின்றார் ரமேஷ்.

படத்தில் அவ்வப்போது ஆவேசத்துடன் பொங்கி, கலாட்டா செய்து, நகைச்சுவை இல்லாத குறையைத் தீர்த்து வைப்பது வாகன ஓட்டுநராக வரும் ஆறு பாலா. தனது கதாபாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கின்றார்.

மருத்துவமனைக்கு வரும் வழியில் ஒரு பெண்ணுடன் ஏற்படும் பிரச்சனையில் வாகன ஓட்டுநர் ஆறு பாலா பணத்தையும், கைத்தொலைபேசியையும் இழந்து விட்டதாகக் கூறுகின்றார். அந்த சம்பவம் தொடங்குவது காட்டப்படுகின்றதே தவிர, என்ன நடந்தது என்பது காட்டப்படவில்லை. படத்திலேயே இல்லையா அல்லது மலேசியாவின் தணிக்கையில் (சென்சார்) கைவைத்து விட்டார்களா என்பது தெரியவில்லை.

கதாநாயகியாக வருபவர் ஆஷ்ரிதா. சொல்லிக் கொள்ளும்படி ஏதும் இல்லை.

இயக்குநர் பிஜூ விஸ்வநாத் – ஏமாற்றம்

சமீப காலமாக மலையாளக் கரையோர இயக்குநர்கள் 36 வயதினிலே, பாபநாசம் போன்ற படங்களின் மூலம் தமிழில் கலக்கிவர, அதே வரிசையில் பிஜூ விஸ்வநாத்தும் வித்தியாசத்தை வழங்குவார் என எதிர்பார்த்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்துவிட்டார் இயக்குநர் பிஜூ விஸ்வநாத்.

பொதுவாக, இயக்குநர்களுக்கு ஒளிப்பதிவு, படத்தொகுப்பு (எடிட்டிங்) போன்ற துறைகளின் ஆழமான ஞானம் இருந்தாலும், ஒரு படம் என்று வரும்போது அதையும் அவர்களே செய்யக்கூடாது, மற்றவர்கள் செய்தால்தான் ஒரு மூன்றாவது பார்வையும் – விமர்சனமும் கிடைக்கும் – என்பது திரையுலகத்தின் இலக்கணக் கோட்பாடுகளில் ஒன்றெனக் கூறுவார்கள்.

அதை முறியடிக்கும் வண்ணம் இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் என மூன்றையும் ஒருவராகவே செய்து முடித்திருக்கின்றார் பிஜூ. அதுவே படத்தின் மோசமான வெளிப்பாட்டுக்குக் காரணமோ என்றும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றது.

மருத்துவமனை மற்றும் நோயாளி விவகாரங்கள் ஓர் அவசர சிகிச்சை வாகனத்தின் உதவியாளர் பார்வையில் பார்க்கப்படுவதுதான் படத்தின் ஒரே வித்தியாசம்.

படத்தின் தலைப்புக்குக் காரணம் இருக்க வேண்டுமே என்பதற்காக விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய்களை வைத்துக் கொண்டு அவ்வப்போது வாயில் எடுத்துப் போட்டுக் கொள்கின்றார். அதனால்தான் ஆரஞ்சு மிட்டாய்!!

தந்தை உயிரோடு இருந்த காலத்தில் அவரை சரியாக கவனிக்காத ஒருவன் தந்தை போன்ற வயதுடைய இன்னொருவருடன் – ஒரு பயணத்தில், பாசப் பிணைப்பைக் காண்பதுதான் படத்தின் மையக் கரு. அதைக் காட்ட, படம் நெடுக அவசர சிகிச்சை வாகனப் பயணத்தில் எத்தனையோ சம்பவங்களை அமைத்துக்கொள்ள வாய்ப்பிருந்தும் இயக்குநர் கோட்டை விட்டு விட்டதாகவே தோன்றுகின்றது.

அதனால் ஆரஞ்சு மிட்டாய் – இனிப்பும் இல்லாத, புளிப்பும் இல்லாத – போரடிப்பான பயணமாக அமைந்து விட்டது.

-இரா.முத்தரசன்