Home இந்தியா இலங்கைக்கு எதிரான மனித உரிமை தீர்மானம் – இந்தியா தொடர்ந்து மௌனம்!

இலங்கைக்கு எதிரான மனித உரிமை தீர்மானம் – இந்தியா தொடர்ந்து மௌனம்!

624
0
SHARE
Ad

manmohan-singhபுதுடில்லி, மார்ச் 9 – இலங்கை விவகாரத்தில் அனாவசியமாக தலையிட மாட்டோம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மீண்டும் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக சபையின் ஆசிய பசிபிக் மன்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் “இலங்கை உட்பட இதர நாடுகளின் விவகாரங்களில் நாங்கள் அனாவசியமாக தலையிட மாட்டோம். நாங்கள் விரும்பி இறங்கவும் மாட்டோம். நேர்மையான தரகராகவும் இருக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்

இலங்கை விவகாரத்தில் இந்தியா எப்போதுமே மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி வந்துள்ளது.

#TamilSchoolmychoice

மன்மோகன் சிங் தொடர்ந்து மௌனம்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்புக்கு உலக நாடுகள் தயாராகி வரும் வேளையில், இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் கவலை மட்டும் தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் மிக கனத்த மௌனம் சாதித்தார்.

அதேவேளையில் இலங்கை தமிழர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாட்டிலுள்ள திமுக, அதிமுக, பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் நடைபெற்ற விவாதத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதிலளித்துப் பேசுகையில் “ இலங்கை தமிழ் மக்கள் சந்தித்து வரும் துயரங்கள் பற்றிய உறுப்பினர்களின் உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு இணையாக கண்ணியத்துடனும், சுய மரியாதையுடனும் வாழ்வதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும். அங்கு தமிழர்கள் கண்ணியத்துடனும், சுய மரியாதையுடனும் வாழ்வதற்காக முயற்சிகளை இலங்கை அரசுடன் சேர்ந்து இந்தியாவும் மேற்கொள்ளும். இது தொடர்பாக அந்த நாட்டு அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நிலையை எண்ணி நாம் மிகுந்த கவலைக்கு உள்ளாகி இருக்கிறோம். அங்கு அரசியல் ரீதியிலான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். அந்த நல்லிணக்கம் இல்லாமல், இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. இலங்கையில் உள்ள தமிழர் தலைவர்களுடன் இலங்கை அரசு கண்டிப்பாக பேச்சு நடத்த வேண்டும். அவர்களுடன் பேச்சு நடத்த இலங்கை அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வழக்கம் போல் பேசினார்.

அமெரிக்க தீர்மானம் குறித்து மெளனம்

ஆனால், ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக மன்மோகன் சிங் கருத்து தெரிவிக்காமல் மௌனம் சாதித்தார்.

அதே போல விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்தும் மன்மோகன் சிங் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.