தலிபான் இயக்கத்தின் தலைவராக இருந்த முல்லா ஓமர், கடந்த 2013-ம் ஆண்டே பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இறந்துவிட்டதாக ஆப்கன் புலன்விசாரணை அமைப்பு, சமீபத்தில் தகவல் வெளியிட்டு இருந்தது. இதனை பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்தது. தலிபான் இயக்கமோ எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தது. இந்நிலையில், அந்த இயக்கத்தின் புதிய தலைவராக முல்லா அக்தர் முகமது மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது பற்றி, தலிபான் இயக்க செய்தித்தொடர்பாளர் சபியுள்ளாஹ் முஜாஹித் கூறுகையில், “நீண்ட யோசனைகளுக்குப் பிறகு புதிய தலைவராக முல்லா அக்தர் முகமது மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். சபியுள்ளாஹ் முஜாஹித், முல்லா ஓமரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலிபான் இயக்கத்தின் தலைவர் பதவிக்கான தேர்வு, பாகிஸ்தானின் குவெத்தா பகுதியில் நடந்ததாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே, பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்துவரும் தலிபான்-ஆப்கன் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முல்லா ஓமரின் மறைவுச் செய்தி திட்டவட்டமாகி உள்ள நிலையில், அவர் பாகிஸ்தானில் இறந்தது உறுதி செய்யப்பட்டால், அந்நாட்டு அரசு தடை செய்யப்பட்ட இயக்கமான தலிபான்களுக்கு உதவிகிறதா? என்று கேள்வி எழ வாய்ப்புள்ளது.