கன்னியாகுமரி, ஆகஸ்டு 1- மதுஒழிப்புப் போராட்டதில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள், போராட்டத்தின் போதே இறந்து போனார். அவரது உடல் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால்,அவருடைய உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்துவிட்டனர்.
பெண்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் இருக்கும் இடங்கள், கோவில் வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்.மதுக்கடைகளை மூடினால்தான் அவரது உடலைப் பெறுவோம் எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
இந்நிலையில் சசிபெருமாள் உடல் பரிசோதனை நடந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்து வந்த அவர் மகன் விவேக், திடீர் என மயங்கி விழுந்ததால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, சசிபெருமாள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆகஸ்ட் 4-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பந்த் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.