கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – நேற்றிரவு காவல் துறையினர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் ஒருவரையும், அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரும், 1எம்டிபி நிறுவனம் தொடர்பிலான விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.
இன்று அவர்கள் இருவரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
“நாங்கள் எதையும் கூறுவதற்கு முன்னால் காவல் துறையினர் தங்களின் விசாரணைகளை முதலில் முடிக்க வேண்டும். அதுவரை காத்திருப்போம்” என எஸ்.பிரகாஷ் என்ற பெயர் கொண்ட வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்ததாக ஸ்டார் ஆங்கில இணைய செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
காவல் துறையினரும் இது தொடர்பில் மேற்கொண்டு தகவல்கள் எதனையும் வெளியிட மறுத்துள்ளனர். காவல்துறைத் தலைவரும் (ஐஜிபி) இது குறித்து உறுதிப்படுத்தி இதுவரை அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.