குளுவாங், ஆகஸ்ட் 3 – டான்ஸ்ரீ மொகிதின் யாசின் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து அம்னோவில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், ஜோகூர் சுல்தானைச் சந்தித்துப் பேசியுள்ளார் மொகிதின்.
தன்னை சந்திக்க வருமாறு சுல்தான் விடுத்த அழைப்பை ஏற்று மொகிதின் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 3.30 மணியளவில் இஸ்தானா புக்கிட் செரினியில் அவரை சந்தித்தார் என தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மொகிதின் ஜோகூர் மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதோடு, ஏற்கனவே ஜோகூர் மந்திரி பெசாராகவும், தற்போதைய ஜோகூர் சுல்தானின் தந்தையின் கீழ் பணிபுரிந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் மொகிதினை சுல்தான் சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில் பதவி நீக்கம் தொடர்பில் இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.
ஜோகூர் முன்னாள் மந்திரி பெசாரான மொகிதின் தம் மனைவி நோரைனி அப்துல் ரகுமான் மற்றும் ஜோகூர் மந்திரி பெசார் காலிட் நூர்டினுடன் சென்று மாநில சுல்தான் மற்றும் ஜோகூர் இளவரசர் தெங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் ஆகியோரை சந்தித்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு மாலை 4.35 மணியளவில் அரண்மைனையில் இருந்து வெளியே வந்த மொகிதின் வெளியே காத்திருந்த செய்தியாளர்களைப் பார்த்து கையசைத்தபடியே புறப்பட்டுச் சென்றார்.