குளுவாங், ஆகஸ்ட் 3 – 1எம்டிபி முறைகேடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசுவதை தாம் நிறுத்தப் போவதில்லை என முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
குளுவாங் அம்னோ தொகுதிக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும்போதே மொகிதின் இவ்வாறு கூறினார்.
பொதுநலன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது தனது கடமை என்று குறிப்பிட்ட அவர், இதனால் சில தரப்பினருக்கு அதிருப்தி ஏற்பட்டால் அதுபற்றி தமக்கு கவலையில்லை என்றார்.
“எனது அரசியல் நண்பர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். “டான்ஸ்ரீ .. இனிமேலும் நீங்கள் துணைப் பிரதமர் அல்ல. இனி முக்கிய விஷயங்கள் (1எம்டிபி) குறித்து அழகாக பேசுங்கள். இதனால் அம்னோ துணைத் தலைவர் என்ற பதவிக்கு ஆபத்து வரக்கூடும். யார் கண்டது என நண்பர்கள் கூறியுள்ளனர். நான் வாய்மூடிக் கிடக்கப் போவதில்லை என அவர்களிடம் கூறியுள்ளேன். துணைத் தலைவர் என்ற வகையில் நான் எதற்காக மவுனம் காக்க வேண்டும்? நான் பேச வேண்டியது அவசியம்” என சுமார் 400 அம்னோ பேராளர்கள் மத்தியில் பேசிய அவர் ஆவேசத்துடன் தெரிவித்தார்.
1எம்டிபி முறைகேடு என்பது சிறிய விவகாரமல்ல என்று குறிப்பிட்ட அவர், உலகம் முழுவதையும் இவ்விவகாரம் எதிர்மறையான கவனிப்பை பெற்றுள்ளது என்றார்.
“இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது, நாம் விரைவில் தீர்வு காண வேண்டும். இது அரசாங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினை என்றாலும் கூட, கட்சி அளவிலும் பேசப்படும். இந்த விவகாரம் மலேசியாவில் மட்டும் கவனிக்கப்படவில்லை, ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது பெரிய விவகாரம். சமுதாயத்தின் மேல் மட்டத்திலிருந்து கிராமப்புறங்கள் வரை அனைவரும் இது குறித்துப் பேசுகிறார்கள்” என்றும் அவர் கூறினார்.
“1எம்டிபி விவகாரத்துக்கு விரைந்து தீர்வு காணவில்லை எனில், அரசாங்கம் மட்டுமல்லாது, அம்னோவின் நற்பெயரும் பாதிக்கப்படும். இந்த விவகாரத்திற்குப் பிறகு கட்சியுடனும் இணைத்துப் பேசப்படும். எனவேதான் அம்னோ துணைத் தலைவர் என்ற வகையில் நான் பேச வேண்டியுள்ளது,” என்றார் மொகிதின்.
1எம்டிபி முறைகேடு காரணமாக அடுத்த பொதுத்தேர்தலில் அம்னோ வீழ்ச்சி காணக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.