Home Featured தொழில் நுட்பம் விரைவில் சொகுசு கார்களில் நோக்கியாவின் ‘மேப்’ தொழில்நுட்பம்!

விரைவில் சொகுசு கார்களில் நோக்கியாவின் ‘மேப்’ தொழில்நுட்பம்!

721
0
SHARE
Ad

nokia Hereகோலாலம்பூர், ஆகஸ்ட் 3 – நோக்கியா நிறுவனத்தின் ‘மேப்’ (Map) தொழில்நுட்பமான ‘ஹியர்’ (Here)-ஐ வாங்குவதில் பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜெர்மனியின் மிக முக்கிய பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனம், 3.2 பில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

செல்பேசி தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்த பிறகு, ஹியர் தொழில்நுட்பத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வந்த நோக்கியா, தற்போது அந்த தொழில்நுட்பத்தையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை பிஎம்டபில்யூ, மெர்சிடிஸ், ஆடி உள்ளிட்ட சில பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தி வந்தன. இந்நிலையில், ஜெர்மானிய நிறுவனத்துடன் நோக்கியா விற்பனை தொடர்பான உடன்படிக்கைக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், அந்த நிறுவனத்தின் பெயரை வெளியிட நோக்கியா மறுத்துவிட்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், இன்று வெளியாக வாய்ப்புள்ளது.

#TamilSchoolmychoice

தொழில்நுட்பத் துறையில் ஏற்கனவே புகழ்பெற்று இருக்கும் ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்கள், கார் தயாரிப்பு வர்த்தகத்தில் களமிறங்கி உள்ளதால், டைம்லர், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள தொழில்நுட்பங்களை தங்கள் தயாரிப்புகளில் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளன.

ஒருவேளை, அந்நிறுவனங்கள் இத்தகைய புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தாவிட்டால், அடுத்த சில வருடங்களில் கார்கள் வர்த்தகத்தில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகப் பெரிய வர்த்தகப் புரட்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.