சென்னை, ஆகஸ்ட் 3 – தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கோரி எதிர்கட்சிகள் நாளை முழு அடைப்பு போராட்டத்தை வலியுறுத்தி உள்ளன. இந்த போராட்டத்திற்கு தேமுதிக, காங்கிரஸ், மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, இந்த போராட்டத்திற்கு திமுக ஆதரவளிக்குமா? என்பது குறித்து இன்று அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
மது ஒழிப்பிற்காக உயிர்நீத்த காந்தியவாதி சசிபெருமாளின் கொள்கைக்கு ஆதரவாக வைகோ, திருமாவளவன் மற்றும் விஜயகாந்த் நேற்று சில பகுதிகளில் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தை வைகோ உள்ளிட்ட சில தலைவர்கள் முன்வைத்த நிலையில், இன்று தேமுதிக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பூரணமதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு தேமுதிக முழு ஆதரவை அளிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” கூறியுள்ளார். இதே கருத்தினை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் வெளியிட்டுள்ளார்.
திமுக-வை பொருத்தவரை, நேற்றைய அறிக்கையில் முழு அடைப்பு போராட்டம் பற்றி அக்கட்சியின் தலைவர் கருணாநிதி குறிப்பிட்டு இருந்தாலும், அதில் திமுக பங்கேற்குமா? என்பது பற்றி எத்தகைய அறிவிப்பினையும் வெளியிடவில்லை. திமுக அறிவிக்காத இந்த போராட்டத்தில், அக்கட்சி பங்கேற்றால் திமுக-வின் முக்கியத்துவம் குறைந்தவிடும். பங்கேற்காவிட்டால், மதுவிலக்கில் திமுக-விற்கு அக்கறை இல்லை என்று பேச்சுக்கள் எழ வாய்ப்புள்ளது. எனவே, திமுக-வின் இன்றைய அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்.