சிட்னி, ஆகஸ்ட் 4 – எம்எச்370 விமானம் மாயமானது குறித்து நட்பு ஊடகங்களில் எழும் பரபரப்புகள் தான், மலேசிய ஏர்லைன்சின் பயணச்சீட்டு விற்பனை பாதிப்படையக் காரணமாக இருப்பதாக அந்நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டோபர் முல்லர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய கிறிஸ்டோபர், பயணச்சீட்டு விற்பனையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேசுகையில், “மாயமான விமானம் பற்றி வெளிவந்த அளவுக்கு அதிகமான செய்திகள், துரதிருஷ்டவசமாக அதற்குக் காரணமாகி விட்டாலும் கூட, நாங்கள் தேவையான இலக்கை அடைய சாதகமாக அமைந்தன” என்று குறிப்பிட்டுள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ‘இண்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
“நட்பு ஊடகங்களில் ஏற்பட்ட பரபரப்பு தான் பெரும்பாலான செய்திகளுக்கு ஊக்கமாக அமைந்தன” என்றும் கிறிஸ்டோபர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு மிக மோசமான வருடமாக அமைந்துவிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 239 பேருடன் எம்எச்370 விமானம் நடுவானில் மாயமானது. அந்த சரிவில் இருந்து அந்நிறுவனம் மீண்டு வருவதற்குள், அதே ஆண்டு ஜூலை மாதம் உக்ரைனில் 298 பேருடன் எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த இரு பேரிடர்களால், மலேசியா ஏர்லைன்ஸ் சந்தையில் கடும் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.