கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அபு காசிம் மொஹமட் விடுமுறையில் இருப்பது உறுதியாகியுள்ளதாக ‘அஸ்ட்ரோ அவானி’ செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த வாரம் வரை, அவர் விடுமுறையில் இருப்பார் என்றும் கூறப்படுகின்றது.
அபு காசிம் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பும் வரை அவரது துணை அதிகாரி டத்தோ முஸ்தஃபார் அலி தலைமை வகிப்பார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ‘தி ஸ்டார்’ வெளியிட்டிருந்த செய்தியில், விடுப்பில் செல்லும்படி அபு காசிம் உத்தரவிடப்பட்டார் என்று பரவலாகக் கூறப்பட்ட கருத்துகளை எம்ஏசிசி-யின் துணை ஆணையர் (செயலாக்கம்) டத்தோஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல் மறுத்ததாகக் கூறப்பட்டிருந்தது.
#TamilSchoolmychoice
அவர் உண்மையில், பணி நிமித்தமாகத் தான் வெளிநாடு சென்றுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி குறித்து விசாரணை செய்யும் சிறப்பு பணிக் குழுவில் எம்ஏசிசி-யும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில், பல எம்ஏசிசி அதிகாரிகள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு, 1எம்டிபி ஊழல் விசாரணையின் ஆவணங்களை கசிய விட்டதற்காக அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாகவும் ‘அஸ்ட்ரோ அவானி’ தெரிவித்துள்ளது.