ஹார்தா, ஆகஸ்ட் 5- மத்தியப் பிரதேசம் ஹார்தா நகரில் ஒரே நேரத்தில் இரு ரயில்கள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்தனர்; பலர் படுகாயமடைந்தனர்.
வாரணாசி நோக்கிச் சென்று கொண்டிருந்த காமயானி எக்ஸ்பிரஸ் ரயிலும், மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலும் மத்தியப் பிரதேசம் மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் கிரியா எனும் கிராமத்தின் வழியாகச் சென்று மச்சக் ஆற்றின் மேம்பாலத்தைக் கடக்கும் போது தடம் புரண்டு விபத்துக்குள்ளாயின.
கடந்த ஓரிரு நாட்களாக மத்தியப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மச்சக் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி தண்டவாளத்தை அடித்துச் சென்றுள்ளது. அதிகாலை நேரம் என்பதால் ரயில் ஓட்டுநரால் தண்டவாளம் துண்டித்திருப்பதைக் கணிக்க முடியாமல் விபத்து நடந்துள்ளதாக மத்திய மண்டல ரயில்வே பி.ஆர்.ஓ பியூஷ் மாதூர் தெரிவித்துள்ளார்.
காமயானி விரைவு ரயிலின் 7 பெட்டிகளும், ஜனதா விரைவு ரயிலின் இன்ஜின் மற்றும் 3 பெட்டிகளும் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்ததில் 14 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
மேலும், விபத்தில் சிக்கிய மற்ற பயணிகளை மீட்கும் பணிகள் துரித கதியில் நடந்ததில் 250 பயணிகள் மீட்கப்பட்டனர்.
மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை முன்னின்று கவனித்தார்.
தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000-மும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.