Home கருத்தாய்வு 77வது பிறந்தநாளைக் கொண்டாடினார் சாமிவேலு-சுங்கை சிப்புட்டை மீண்டும் வென்று சாதனை படைப்பாரா?

77வது பிறந்தநாளைக் கொண்டாடினார் சாமிவேலு-சுங்கை சிப்புட்டை மீண்டும் வென்று சாதனை படைப்பாரா?

700
0
SHARE
Ad

மார்ச் 9 –   மஇகாவின் முன்னாள் தேசியத்  தலைவரும், தற்போதைய இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதரும், மாஜூ கல்வி மேம்பாட்டுக்கழகமான எம்.ஐ.இ.டி யின் தலைவருமான டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு, நேற்று தமது 77வது பிறந்தநாள் விழாவை தமது இல்லத்தில், குடும்ப உறுப்பினர்களுடன் மிக எளிமையாகக் கொண்டாடியுள்ளார்.

அவரது பிறந்த நாளுக்காக அவருக்கு குடும்ப உறுப்பினர்களும் மற்றும் ம இ கா உறுப்பினர்களும், நண்பர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளைத்  தெரிவித்திருக்கின்றனர்.

KL05_300304_SAMY VELLUகடந்த 50 ஆண்டுகாலமாக மலேசிய அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக – சக்தியாக – இருந்து வரும் அவர், மலேசியாவில் தேசிய முன்னணின் ஆட்சியில் ஒரு முக்கிய மையப்புள்ளியாக இதுவரை திகழ்ந்து வருகிறார் என்றால் அது மிகையில்லை.

#TamilSchoolmychoice

சுறுசுறுப்புக்கும், உழைப்புக்கும் வயது ஒரு தடையல்ல என்பதற்கு உதாரண புருஷராக திகழ்பவர் சாமிவேலு.

கட்சித் தலைமைத்துவத்தில் இருந்து கடந்த காலங்களில் விலகியுள்ள தேசிய முன்னணி உறுப்புக் கட்சித் தலைவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டும் வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டும் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்க, இவர் மட்டும் நாட்டுக்காகவும், அரசாங்க நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன் என்ற கொள்கையோடு, தனக்கு நனகு பரிச்சயமான ஒரு துறையான கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு துறையில் தென்கிழக்காசிய நாடுகளுக்கான தூதர் பொறுப்பை ஏற்றார்.

தனது பதவிக் காலத்தில் தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களோடும், அரசாங்க அமைப்புக்களோடும் ஏற்படுத்திக் கொண்ட நல்லுறவுகளை, தொடர்புகளை இன்றைக்கும் மலேசிய அரசாங்கத்தின் நலனுக்காக பயன்படுத்திக் கொண்டு வருகின்றார்.

மக்களோடு அணுக்கமான தொடர்பு

இன்றைக்கும் – கட்சித் தலைவராக இல்லாத காலத்திலும் – அவரைப்போன்று அரசியல், சமுதாயத் தலைவர்களுடனும், பொதுமக்களுடனும் அணுக்கமான தொடர்புகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள் யாருமில்லை.

அழைக்கின்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார். பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கின்றார். தெரிந்தவர்கள், அறிமுகமானவர்களின் இன்ப, துன்ப நிகழ்வுகளில் பங்கு கொள்கின்றார்.

ஒருமுறை ஒரு தொகுதியில் தோல்வியுற்றால் அதன்பின்னர் அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்காமல் தலைமறைவாகிவிடும் தலைவர்களுக்கு மத்தியில் இப்போதும், தான் கடந்த முறை தோல்வி கண்ட சுங்கை சிப்புட் தொகுதியில் சுற்றிச் சுழன்று வாக்காளர்களையும், தொகுதி மக்களையும் தவறாமல் சந்தித்து வருகின்றார்.

தனது தமிழார்வத்தின் காரணமாக, வாரந்தோறும் தவறாமல் தமிழ் நேசனில் தனது சிந்தனைகளை கவிதையாக வடித்து வருகின்றார்.

இந்த வயதிலும் ஓர் இளைஞருக்குரிய சுறுசுறுப்புடன், கம்பீரம் குறையாமல் அவர் இயங்கிவருவது மற்றவர்களும் அவரைப் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

சாமிவேலுவின் கடந்த கால அரசியல் பாணியிலும், அவரது அரசியல் நடவடிக்கைகளிலும் பலருக்கு கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருக்கலாம்.

ஆனால் அவரது தலைமைத்துவ ஆற்றலில் – மக்களைத் தவிர்க்காமல் சந்திக்கும் பண்புகளில் – பிரச்சனைகளை தயங்காமல் நேருக்கு நேர் எதிர் கொள்ளும்  துணிச்சலில் – யாருக்கும் இருவித கருத்துக்கள் இருக்க முடியாது.

ம.இ.காவை முன்வைத்து அவர் மேற்கொண்ட முயற்சிகளில், இன்றைக்கு கம்பீரமாக எழுந்து நிற்கும்  ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் சாமிவேலுவின் சாதனையை இன்றைக்கும் இனிவரும் காலங்களிலும் எடுத்துக்காட்டப் போகும் அடையாளமாகும்.

சுங்கைசிப்புட் தொகுதியை மீண்டும் வென்று சாதனை படைப்பாரா?

சாமிவேலு தனது 77 அகவையைக் கொண்டாடி மகிழும் இந்த தருணத்தில் அவர்மீது மற்றொரு கடமையும் பொறுப்பும் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்தமுறை தேர்தலில் தான் கைநழுவ விட்ட சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் கைப்பற்றி தேசிய முன்னணிக்கு வெற்றிக் கனியைப் பறித்துத் தரவேண்டிய பொறுப்பு அவரது தோள்களில் தற்போது சுமத்தப்பட்டுள்ளது.

அதற்காக, சுங்கைசிப்புட் தொகுதி நாடாளுமன்ற தொகுதியின்  தேசிய முன்னணி தேர்தல் ஒருங்கிணைப்பாளராக பிரதமரின் நேரடி ஈடுபாட்டால் சாமிவேலு  நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

நியமனத்துக்கு முன்பாகவே, சுங்கை சிப்புட் தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்களைச் சந்தித்து வந்த சாமிவேலு, நியமனத்திற்குப் பின் இன்னும் சுறுசுறுப்பாக, தனது பதவியின் துணைகொண்டு, வியூகங்களை வகுத்து அந்த தொகுதியில் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றார்.

இதுவரை அந்த தொகுதியின் ம.இ.கா வேட்பாளர் யார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத பட்சத்தில், தன்னையே ஒரு வேட்பாளர் போல் முன்னிறுத்தி, அந்த தொகுதியில் தான் கடந்த 34 ஆண்டுகளாக வழங்கி வந்த சேவைகளின் அடிப்படையில், வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றார்.

தனது அரசியல் சாதுர்யத்தோடும் – அனுபவத்தோடும் – சிறந்த பேச்சாற்றல் திறனோடும் சுங்கை சிப்புட் தொகுதியில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றார்.

ஆனாலும், சாமிவேலு தன் தோள்களில் ஏற்றிக் கொண்டிருக்கும் பொறுப்பும், அவர் மீண்டும் மற்றொரு அரசியல் போருக்குத் தயாராகும் சுங்கை சிப்புட் என்ற களமும்  சாதாரணமானதல்ல!

நடப்பு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமாரும் கடந்த பல ஆண்டுகளாக தனது சேவைகளின் மூலமும், எதிர்க்கட்சிகளின் ஆதரவு பலத்தோடும் அந்த தொகுதியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளவர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜெயக்குமார் சுங்கை சிப்புட் தொகுதியில் தோல்வி கண்டால் – வெற்றி பெறும் தேசிய முன்னணி மற்றும் ம.இ.கா வேட்பாளர் யாராக இருந்தாலும் – அந்த வெற்றி சாமிவேலுவின் வெற்றியாகவே – அவரது மற்றொரு சாதனை சரித்திரமாகவே பதிவு செய்யப்படும்,  போற்றப்படும்!

தான் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இழந்ததை, மீண்டும் தேசிய முன்னணிக்கு மீட்டுக் கொடுத்த பெருமையும் கௌரவமும் அவருக்குக் கிட்டும். அதன் மூலம் அவருக்கு புதிய அரசியல் பலம் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

ஆனால், நடப்பு அரசியல் சூழ்நிலைகளினால், அப்படியே அவரால் தன் முயற்சியில் வெற்றி காண முடியாமல் போனாலும் காலம், மலேசிய அரசியலிலும் – நாம் அனைவரும் கற்றுக் கொள்ளும் விதத்திலும் மற்றொரு பாடத்தைப் பதிவு செய்யும்.

தனது நீண்ட நெடிய அரசியல் பயணத்தில், தனது 77வயதில், வயதை ஒரு பொருட்டாக கருதாமல், தனது உடல்நலத்தைப் பற்றிக் கவலைப் படாமல், தான் கொண்ட அரசியல் கொள்கைக்காகவும், தான் சார்ந்துள்ள அரசியல் கட்சியின் நலனுக்காகவும், தனது உழைப்பையும், அனுபவத்தையும் முன்வைத்து – தன்னுடைய சொந்த லாபக் கணக்கு பார்க்காமல் – சாமிவேலு மற்றொரு அரசியல் களத்தில் துணிச்சலுடன் போராடினார் – என்ற பாடம்தான் – சரித்திரப் பதிவுதான் அது.

-இரா.முத்தரசன்