புத்ராஜெயா, ஆகஸ்ட் 6 – நாட்டிலுள்ள இணைய செய்தி ஊடகங்களுக்கு (Online News portals) விரைவில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
புதிதாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இணைய சட்டதிருத்தங்களின் கீழ், இணைய செய்தி ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என ‘த ஸ்டார்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் நடைமுறையில் இருக்கும் இணைய சட்டம் உட்பட பல்வேறு நாடுகளில் அமலில் உள்ள இணைய சட்டங்களை தமது அமைச்சரவை ஆய்வு செய்து வருவதாக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் (படம்) தெரிவித்துள்ளார்.
“இந்தப் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்ய மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகளை சந்தித்து வருகின்றேன்” என்றும் சாலே கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் நடப்பு இணைய சட்டத்தின் படி, மாதந்தோறும் குறைந்தது 50,000 தனிப்பட்ட பார்வையாளர்களைக் கொண்ட இணைய செய்தி ஊடகங்களுக்கு மட்டுமே வருடாந்திர வெளியீட்டு உரிமையை வழங்குகின்றது அந்நாட்டின் ஊடக மேம்பாட்டு ஆணையம் (எம்டிஏ).
அதேவேளையில், அந்த ஊடகங்கள் எம்டிஏ -வுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு 50,000 சிங்கப்பூர் டாலரை வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும். அரசாங்கத்தின் சட்டங்களை அவர்கள் மீறி செய்தி வெளியிடுவார்களேயானால், அந்த வைப்புத்தொகை பறிமுதல் செய்யப்படும்.
ஆனால் மலேசியாவில் தற்போது, இணைய செய்தி ஊடகங்கள் இலவசமாகச் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள் உள்துறை அமைச்சிடமிருந்து வெளியீட்டு உரிமம் எதையும் பெறவேண்டியதில்லை. எனவே அச்சுப்பதிப்பு மற்றும் வெளியீட்டு சட்டம் 1984-ன் கீழ் அவர்கள் செயல்படத்தேவையில்லை.
எனினும், இந்த புதிய சட்டதிருத்த பரிந்துரைக்கும், 1எம்டிபி விவகாரத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் சாலே தெரிவித்துள்ளார்.
காரணம், 1எம்டிபி விவகாரத்தில், ‘த எட்ஜ்’, ‘சரவாக் ரிப்போர்ட்’ போன்ற இணைய செய்தி ஊடகங்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய கட்டுரைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த புதிய சட்டதிருத்தம் குறித்து அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் சாலே குறிப்பிட்டுள்ளார்.