சென்னை, ஆகஸ்ட் 6- மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களைக் கையாள்வது தொடர்பாக அவரது உதவியாளர்களுக்கிடையே மோதல் உருவாகியுள்ளது.
அப்துல் கலாமிடம் நீண்டகாலமாக உதவியாளராகவும் அறிவியல் ஆலோசகராகவும் இருந்து வந்தவர் வி. பொன்ராஜ். அவரைப் போல் அப்துல் கலாமின் முன்னாள் மாணவரான ஸ்ரீஜன் பால் சிங் என்பவரும் அப்துல் கலாமிடம் உதவியாளராக இருந்து வந்தார்.
இவ்விருவரில் ஸ்ரீஜன் பால் சிங் என்பவர் அப்துல் கலாம் உயிருடன் இருந்த போதே அப்துல் கலாமின் அதிகாரப்பூர்வ பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களைப் பயன்படுத்துவதில் அவருக்கு உதவியாக இருந்தவர்.
ஆகையால் அவர் இறந்த பிறகும் அவரது பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.அதில் அப்துல் கலாம் பற்றிய அருமையான பதிவுகளைப் பகிர்ந்து வந்தார்.இதற்குச் சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வி.பொன்ராஜ், அப்துல் கலாமின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களை ஸ்ரீஜன்பால் சிங் பயன்படுத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள அப்துல் கலாமின் அலுவலகத்திலிருந்து வி.பொன்ராஜ், ஸ்ரீஜன்பால் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“சமூக வலைதளங்களில் அப்துல் கலாமின் பெயரில் நீங்கள் எந்த அறிக்கையையும் தரக் கூடாது. அப்துல் கலாம் பெயரிலோ அல்லது அவரது நினைவாகவோ தொடங்கியுள்ள அனைத்து பேஸ்புக்,டுவிட்டர் கணக்குகளையும் மூடிவிட வேண்டும்”என்று அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அப்துல் கலாம் குறித்து ஸ்ரீஜன் பால் சிங் எழுதிய செய்திகள், கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து அவருக்குப் புகழ் வரத் தொடங்கியதே பிரச்சினைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அப்துல் கலாம் மறைவுக்குப் பின்னர் “Last Eight Hours with Kalam” என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை சமூக வலைதளங்களில் வைரல் ஆகப் பரவி அவரைப் பற்றிப் பேச வைத்தது.
“ஒரு மாணவராகக் கலாமுடனான தனது அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதில் சிங்குக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவருக்கு அதில் முழு உரிமை உள்ளது. அதேசமயம், கலாம் அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கங்கள் மூலமாக அவர் கருத்துக்களைச் சொல்வது தவறு. அதற்கென்று ஒரு அலுவலகம் உள்ளது. அது அந்த பணியைப் பார்த்துக் கொள்ளும்” என வி.பொன்ராஜ் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு ஸ்ரீஜன் பால் சிங்,“கலாம் உயிருடன் இருந்தபோது, தனது சமூக வலைதளப் பக்கங்களைப் பராமரிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். அதில் நான் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வந்தேன். அலுவலகம் அதை விரும்பவில்லை என்றால் உடனடியாக நான் அந்தப் பக்கங்களை மூடி விடத் தயாராக இருக்கிறேன்.
அதேசமயம், கலாமுடனான எனது அனுபவங்களை மக்களிடம் சொல்வதிலிருந்து அவர்கள்
என்னைத் தடை செய்ய முடியாது. கலாம் அவர்கள் எனக்குக் குரு. கலாமுடன் இணைந்து நான் இரு நூல்களை எழுதியுள்ளேன். மூன்றாவது நூலை எழுதிக் கொண்டிருந்த நிலையில்தான் அவர் மரணமடைந்து விட்டார். அவருடைய உதவியாளனாக, ஒரு சராசரி இந்தியக் குடிமகனாகக் கலாம் அவர்களைப் பற்றி எழுத எனக்கு உரிமையிருக்கிறது” என்று பதில் தெரிவித்திருக்கிறார்.
அப்துல் கலாம் மறைந்து ஒரு வாரம்தான் ஆகியுள்ளது. அதற்குள் அவரது உதவியாளர்களுக்குள் இத்தகைய மோதல் என்பது அவரது புகழுக்கு இழுக்காகும். எனவே, அவர்கள் இப்பிரச்சினையை மேலும் வளர்க்காமல் சுமூகமாக முடித்துக் கொள்வது நல்லது.