கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 – தன்னிடம் அளிக்கப்பட்ட அரசியல் நன்கொடை குறித்து விமர்சித்துள்ள அம்னோ தொகுதித் தலைவர்களுக்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமது நடவடிக்கைகள் அனைத்தும் கட்சி நலன் கருதி மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
“அம்னோவின் தலைவர் என்ற முறையில், நான் நிதிகளைப் பெறுவதும் கூட கட்சி நலனுக்காகத்தான். அம்னோ தொகுதி அலுவலகங்கள் இயங்குவதற்கு உரிய மாதாந்திர ஒதுக்கீடு அளிப்பது உட்பட பலவகையிலும் தொகுதிகளுக்கு உதவி வருகிறேன்.”
“நான் ஒன்று பிறரது கருத்துக்களைச் செவிமடுக்காத சர்வாதிகார தலைவரல்ல. நான் நஜிப் என்பதால் என் மீது தாக்குதல் நடக்கவில்லை. அம்னோ தலைவர் என்பதால்தான் தாக்குதலுக்கு ஆட்படுகிறேன்,” என்று நஜிப் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூற்றுக்களை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், இதனால் கட்சி வலுவிழக்கும் என்றார்.
“கட்சி வீழ்ச்சியடைய வேண்டும் என்று கருதினால் தலைமையை குறிவைப்பார்கள். கட்சியின் உச்சநிலை தலைவர் மீது ஏதேனும் குற்றம்காண பார்ப்பார்கள். அவர் மீது எந்த தவறும் இல்லையெனில், அவரை கீழிறக்க கதைகளை உருவாக்குவார்கள். எனவே, எனது மனைவி அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாகக் கூறப்படுவது உண்மையல்ல,” என்று நஜிப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.