பெர்லின், ஆகஸ்ட் 10 – கடந்த மார்ச் மாதம் ஜெர்மன்விங்ஸ் விமானம், ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் பயணம் செய்த 150 பேரும் பலியாகினர். விசாரணையில், துணை விமானி வேண்டுமென்றே விமானத்தை மோதியது தெரிய வந்தது. அப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஜெர்மன்விங்ஸின் தாய் நிறுவனமான லுஃப்தான்சா, 27,500 டாலர்களை இழப்பீடாக வழங்க முன்வந்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை பெற மறுத்துவிட்டனர். மேலும் அவர்கள், அமெரிக்க நீதிமன்றத்தில், தங்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் இழப்பீடு போதவில்லை என்று வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இதுதொடர்பாக விளக்கமளிக்க மறுத்துவிட்ட ஜெர்மன்விங்ஸ் நிர்வாக அதிகாரிகள், விரைவில் விமான விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தேவையான இழப்பீடுகள் வழங்கப்படும் என்று மட்டும் தெரிவித்துள்ளனர்.