சுபாங் ஜெயா – மஇகா இடைக்காலத் தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது உரைகளில் அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டுபவர். வழக்கமாக தனது உரையைத் தொடங்கும் போது கூட ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற முதல் குறளைக் கூறிவிட்டுத்தான் தனது உரையைத் தொடங்குவார்.
அதே போன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை சுபாங்கில் நடைபெற்ற மஇகா கிளைத் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றியபோதும், ஓர் அமைச்சரின் தலைமைத்துவம் எப்படியிருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டி அதற்கேற்ப, தான் நடந்து வருவதாக அவர் கூறிய சுவாரசியமான கருத்து கூட்டத்தில் கலந்து கொண்ட கிளைத் தலைவர்களைக் கவர்ந்தது.
அமைச்சு அதிகாரத்தின் கீழ் வரும் 633வது அந்தக் குறள் இதுதான்:
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.
“ஓர் அமைச்சர், ஒரு தலைவர் எப்படியிருக்க வேண்டும் என்றும் வள்ளுவர் கூறியிருக்கின்றார். அதாவது அமைச்சனாக இருப்பவன் தனது எதிர் அணியில் இருப்பவர்களை எதிரியிடமிருந்து பிரித்துத் தன் பக்கம் ஈர்க்க வேண்டும். அதே வேளையில் தன் பக்கம் இருக்கும் ஆதரவாளர்களைப் பாதுகாத்து தன் பக்கமே பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று தன் அணியிலிருந்து பிரிந்து சென்றவர்களை, அவர்கள் திரும்பவும் தன் பக்கம் வரும்போது அவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு திறமையாகச் செய்பவன்தான் வல்லவனான அமைச்சனாக கருதப்படுவான் என வள்ளுவர் கூறியிருக்கின்றார். அதைத்தான் நானும் செய்து கொண்டிருக்கின்றேன்” என டாக்டர் சுப்ரா கூறியபோது அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.
பின்குறிப்பு:
மேற்கண்ட குறளுக்கு டாக்டர் மு.வரதராசனார் வழங்கியுள்ள விளக்கவுரை பின்வருமாறு:
பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக் கொள்வதிலும் வல்லவன் அமைச்சன்.