கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் புகுந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி குறித்து முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
“மலேசியா பிரதமருக்கு 700 மில்லியன் டாலர் (2.6 பில்லியன் ரிங்கிட்) நன்கொடையாக அளிக்க இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்?” என்று மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஒபாமாவால் கூட இந்த அளவிற்கு நிதியை தனது அதிபர் பதவியின் மூலம் திரட்ட முடியாது. அந்த நிதி அராப்பில் இருந்து வந்ததாகப் பரிந்துரைக்கப்படுகின்றது”
“அராப்காரர்கள் தாராளமானவர்கள் தான். ஆனால் அந்த அளவிற்குத் தாராளமானவர்கள் கிடையாது” என்று மகாதீர் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் செல்வாக்கு உள்ள மகாதீர், மக்களிடமிருந்து ‘நன்கொடையாக’ அந்நிதி பெறப்பட்டது என்று கூறப்படுவதைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“நானும் அரசாங்கத்தின் அந்தப் பதிலை நம்பவில்லை. நட்பு ஊடகங்களில் பெரும்பாலான மலேசியர்களின் கருத்தும் அது தான். அந்தப் பதிலைக் கேட்டு உலகமே சிரிக்கிறது” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.