கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 – மலேசியாவில் எந்த கட்சியாக இருந்தாலும் சரி, தேர்தலுக்காக 2 பில்லியன் ரிங்கிட் செலவழிப்பது என்பது மிகவும் தவறு என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை, தேர்தல் செலவிற்கு எந்த ஒரு வரைமுறையும் தேர்தல் ஆணையம் விதிக்கவில்லை என்று வைத்துக் கொண்டால் கூட, இந்தத் தொகை மிகவும் அதிகம் தான் என்று மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் 5 தேர்தல்களிலும், தனக்கு தலா 10 மில்லியன் மட்டுமே தேவைப் பட்டதாகவும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடையாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது குறித்து மகாதீர் கடுமையாக விமர்சித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.