சென்னை, ஆகஸ்ட் 10- முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் முன் பிணை தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால் அவர் கைது செய்யப்படலாம்.
தயாநிதிமாறன் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது, 300க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளைச் சட்டவிரோதமாகச் சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்குப் பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்பதால் அவர் முன்பிணை பெற்றிருந்தார். எனினும் இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வந்தது.
ஆனால், இவ்வழக்கு விசாரணைக்குத் தயாநிதிமாறன் ஒத்துழைப்புத் தராததால், அவரது முன் பிணையைத் தள்ளுபடி செய்யக் கோரி சிபிஐ, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தயாநிதிக்கு வழங்கப்பட்ட முன்பிணையைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும்அவர் மூன்று நாட்களுக்குள் சிபிஐ முன்பு சரண் அடையும்படியும் உத்தரவிட்டுள்ளனர். இல்லாவிட்டால் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவாகலாம்.