Home இந்தியா ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவித்த நீதிபதிக்குத் தகவல்ஆணையர் பதவி!

ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவித்த நீதிபதிக்குத் தகவல்ஆணையர் பதவி!

481
0
SHARE
Ad

jayalalitha (1)சென்னை, ஆகஸ்ட் 10- வருமான வரி வழக்கிலிருந்து ஜெயலலிதா தரப்பினரை விடுவித்த நீதிபதி தெட்சணா மூர்த்திக்குத் தான் தற்போது  தகவல் ஆணையர் பதவி  வழங்கப்பட்டுள்ளதாகத் திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

மாநிலத் தகவல் ஆணையத்தின் முதன்மை ஆணையராகக் கே.ராமானுஜம் அவர்களும், இணை ஆணையராக நீதிபதி தெட்சணா மூர்த்தி அவர்களும் இன்று ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டனர். இதில் நீதிபதி தெட்சணா மூர்த்தி வருமான வரி வழக்கிலிருந்து ஜெயலலிதா தரப்பினரை விடுவித்தவர் என்பது தெரிகிறது.

இதுபற்றித் திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பதாவது:

#TamilSchoolmychoice

“ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருமான வரி கணக்குகளை  1991-92 மற்றும் 1992-93ம் ஆண்டுகளில் தாக்கல் செய்யவில்லை.

1993-94ம் ஆண்டுக்கு  ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் தனிப்பட்ட வருமானங்களுக்கான ஆவணங்களையும் வருமானவரித் துறையிடம் அவர்கள் தாக்கல்  செய்யவில்லை.   இதற்காக அவர்கள் மீது 1996ல் வருமான வரித் துறையினர் வழக்குத் தொடர்ந்தனர்.   இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள  முதலாவது பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் கடந்த  15 ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்தது.

30-6-2014 அன்று ஜெயலலிதா, சசிகலா மற்றும்  சசி  எண்டர்பிரைசஸ் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமான வரி தாக்கல் செய்யாதது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு வருமான வரித்  துறையிடம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளதாகவும்,  எனவே இந்த விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டுமென்றும் கோரினார்கள்.

இந்த வழக்கிலேதான்  நீதிபதி தெட்சணாமூர்த்தி, 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி  ஜெயலலிதா தரப்பினர்  தாக்கல் செய்த  மனுவினை ஏற்று,   வழக்குகளில் இருந்து  அவர்களை விடுவித்து உத்தரவிட்டார்.

அவ்வாறு வருமான வரி வழக்கிலிருந்து ஜெயலலிதா தரப்பினரை விடுவித்த நீதிபதி தெட்சணாமூர்த்திக்குத்தான் தற்போது  தகவல் ஆணையர் பதவி  வழங்கப்பட்டு,  அவர் பதவிப் பொறுப்பினை ஏற்றிருக்கிறார்.

தற்போது பூனை வெளி வந்து விட்டது என்பது புரிகிறதா? இல்லையா?  வருமான வரி  வழக்கிலிருந்து ஜெயலலிதா எப்படி விடுவிக்கப்பட்டார் என்பதன் பின்னணி  நிரூபணமாகி விட்டதா இல்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.