புதுடில்லி, ஆகஸ்ட் 11-“இந்தியா ஒரு சர்வாதிகார நாடன்று; ஆதலால் இங்கே யாரேனும் ஆபாசப்படம் பார்த்தால் அதைத் தடுக்க முடியாது” என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
ஆபாச இணைய தளத்தால் பல்லாயிரக் கண்க்கான மாணவர்களின்- இளைஞர்களின் வாழ்க்கை பாழாகிறது என்று தொடுக்கப்பட்ட பொது நல வழக்கில், மனுதாரர் குறிப்பிட்டிருந்த பட்டியலில் உள்ள ஆபாச இணையதளங்களை ஆராய்ந்து முடக்குவதற்கான நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அப்படிப்பட்ட இணையதளங்களை முடக்கியது.
இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து, மறு பரிசீலனை செய்து, குழந்தைகளை ஆபாசமாகச் சித்தரிக்காத ஆபாச இணையதளங்களுக்கு மட்டும் அனுமதியளித்தது. இதனால் ஆபாச இணையதளப் பயன்பாட்டாளர்கள் நிம்மதியடைந்தனர்.
இந்நிலையில்,மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்கறிஞர், “ஆபாசப்படங்களைப் பார்ப்பதும், அதைப் பகிர்ந்துகொள்வதும் பிணையில் விட முடியாத அளவிற்குக் கடும் குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, “இந்த விவகாரத்தில் மத்திய அரசுதான் ஒரு முடிவை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தது.
இதற்குப் பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, “நமது நாடு சர்வாதிகார நாடில்லை. மக்களின் தனிமனித சுதந்திரத்தில் அரசு தலையிட விரும்பவில்லை. கலாச்சாரக் காவலராகச் செயல்படவும் விரும்பவில்லை.
சிலர் தங்கள் அறையில் தனியாக ஆபாசப்படம் பார்க்க விரும்புகிறார்கள். அதை நாம் தடுக்க முடியுமா?
சில வருடங்களுக்கு முன்பெல்லாம் பத்திரிகை வடிவில் மட்டுமே ஆபாச படங்கள் வெளி வந்தன. அவற்றை வெளியிட விடாமல் தடை விதிக்க முடிந்தது. ஆனால், இப்போது கைபேசிகளில் ஆபாசப்படங்களைப் பார்த்து விடுகிறார்கள். அதை எப்படித் தடுப்பது?
அதே சமயத்தில், குழந்தைகளின் ஆபாசப்படங்களுக்குக் கண்டிப்பாகத் தடை விதிக்கப்பட வேண்டும்.அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.இதுபற்றி நாடாளுமன்றத்தில் தான் விவாதம் நடத்த வேண்டும். நீதிமன்றத்தில் விசாரிக்கும் அளவிற்குப் பிரச்சினைக்குரியதல்ல” என விளக்கம் அளித்தார்.