Home இந்தியா ஆபாசம் குறித்து கருத்து சொல்லப்போய் வகையாக சிக்கிக் கொண்ட பிரபல வார இதழ்!

ஆபாசம் குறித்து கருத்து சொல்லப்போய் வகையாக சிக்கிக் கொண்ட பிரபல வார இதழ்!

1057
0
SHARE
Ad

kuudham1சென்னை – ஆடையானாலும் சரி, அதிகாரமானாலும் சரி பெண்களுக்கு கருத்து சொல்லவும், அறிவுரை கூறவும் எப்போதும் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி சமீபத்தில் பிரபல வார இதழான ‘குமுதம் ரிப்போர்டர்’ பெண்கள் அணியும், சமீபத்திய ‘நாகரீக’ உடையான ‘லெக்கின்ஸ்’ (Leggings) குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது.

“லெக்கின்ஸ் அணிவது ஆபாசமா? எல்லை மீறும் இளசுகள்” என்ற பெயரில் வெளியான அந்த கட்டுரை பல பெண்களை கடும் கோபத்திற்குள்ளாக்கி உள்ளது. கட்டுரையில் உள்ள கருத்துகளினால் ஏற்பட்ட கோபத்தை விட, அவர்கள் அந்த கட்டுரைக்காக வெளியிட்டுள்ள அட்டைப் படம் (Cover Photo) தான் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொது இடங்களில் லெக்கின்ஸ் அணிந்து இருக்கும் பெண்களுக்கு தெரியாமல், மிகவும் ஆபாசமான முறையில் அவர்களை புகைப்படம் எடுத்து, அதனை அட்டைப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர். இதன் மூலம் அந்த கட்டுரை எழுதியவர்களின் நோக்கம் லெக்கின்ஸ் பற்றி கருத்து கூறுவதா? அல்லது ஆபாசத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதா? என்றே தெரியாமல் போய்விட்டது.

#TamilSchoolmychoice

விவரம் அறிந்தவர்கள், இந்த கட்டுரையின் மூலம் அனைத்து பத்திரிக்கை தர்மமும் மீறப்பட்டு, வர்த்தக நோக்கமே தெரிவதாக குற்றம்சாட்டுகின்றனர். நட்பு ஊடகங்களிலும் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குமுதம் ரிப்போர்டருக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர்.

“ஆண்கள் நாகரீகம் என்ற பெயரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு காற்சட்டை அணிவதை எந்த பத்திரிக்கையாவது கட்டுரை வெளியிட்டதுண்டா? அப்படியானால் உங்களின் நோக்கம் பெண்களை குறி வைத்தே உள்ளது. ஆபாசம் என்பது ஆடைகளில் அல்ல அதனை பார்ப்பவர்களின் கோணங்களில் தான் உள்ளது.”

“கட்டுரைக்காக புகைப்படம் எடுத்தவர் ஏன்? லெக்கின்ஸ் அணிந்த பெண்களின் ஆடை விலகி இருந்த தருணத்தில் புகைப்படம் எடுத்தார். அப்படியானால் அவர் ஆபாச கண்ணோட்டத்துடன் தான் அந்த பெண்களைப் பார்த்துள்ளார் என்பது தெரிகிறது” என்கிற ரீதியில் கடுமையாக சாடி வருகின்றனர்.

மேலும், இந்த கட்டுரைக்காக குமுதம் குழுமம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று 5000 பேர் கொண்ட மனுக்களும் தயாராகி வருகின்றது.