கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – ‘த எட்ஜ்’ பத்திரிக்கைக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு (judicial review) ஒன்றை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அந்தப் பத்திரிக்கையை நடத்திவரும் எட்ஜ் கொம்யுனிகேஷன்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் சமர்ப்பித்திருந்தது.
அந்த சீராய்வு மனு மீதான விசாரணைக்கு முன்பாக எட்ஜ் பத்திரிக்கை மீண்டும் வெளிவர அனுமதி அளிக்க வேண்டும் என எட்ஜ் நிறுவனம் செய்திருந்த விண்ணப்பத்தை நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
எட்ஜ் வீக்லி என்ற வாரப் பத்திரிக்கைக்கும், எட்ஜ் ஃபைனான்சியல் டெய்லி என்ற வணிக நாளிதழுக்கும் எதிராக மூன்று மாதங்களுக்கு தடை விதித்து உள்துறை அமைச்சு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அரசாங்கத் தரப்பில் இன்றைய வழக்கில் வாதாடிய அரசாங்க தரப்பின் வழக்கறிஞர் எலிஸ் லோக் “உள்துறை அமைச்சின் தடையுத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பு வழங்க சிறப்பு சூழ்நிலைகள் எதையும் எட்ஜ் நிறுவனம் காட்டவில்லை என அரசு தரப்பில் வாதாடினோம். சீராய்வு மனு விசாரணையில் எட்ஜ் வெற்றி பெற்றால் அவர்களுக்குப் போதுமான அளவு நஷ்ட ஈடு கிடைக்கும். எனவே இப்போதைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டியதில்லை என்ற எங்களின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது” என்று கூறியுள்ளார்.
எட்ஜ் பத்திரிக்கைகளுக்கு எதிராக உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளரின் தடையுத்தரவை அகற்றக் கோரும் ‘செர்ட்டியோராரி’ (Certiorari) என்ற மனுவையும் எட்ஜ் நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இனி அடுத்த கட்டமாக சீராய்வு மனுவின் முழுவிசாரணை முடியும்வரை எட்ஜ் நிறுவனம் காத்திருக்க வேண்டும் என்பதோடு, அதுவரையில் எட்ஜ் குழுமப் பத்திரிக்கைகள் வெளிவரவும் முடியாது.