Home இந்தியா இந்திய மக்களுக்கு ஜெயலலிதா சுதந்திர தின வாழ்த்து!

இந்திய மக்களுக்கு ஜெயலலிதா சுதந்திர தின வாழ்த்து!

646
0
SHARE
Ad

jayalalitha-66-600சென்னை,ஆகஸ்ட் 14- இந்திய மக்களுக்குத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

69-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

“ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து,  நம் இந்தியத் திருநாடு சுதந்திரம்  பெற்ற இப்பொன்னாளில்,  நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

#TamilSchoolmychoice

ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து நம் தாய்த் திருநாட்டை மீட்டு, நாட்டு மக்களும் அவர்தம் வருங்காலச் சந்ததியினரும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்திட, தங்கள் இன்னுயிரைத் துச்சமென மதித்து, நாட்டு விடுதலைக்காகத்  தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து உயிர்த் தியாகம் செய்த தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட தியாகச் செம்மல்களின்  நாட்டுப் பற்றையும் தியாக உணர்வையும் போற்றி நினைவுகூரும் நன்னாள் இந்தச்  சுதந்திரத் திருநாளாகும்.

“இமயம் தொட்டுக் குமரி மட்டும் இங்கிருக்கும் யாவரும் இந்தியாவின் மக்களென்ற சொந்தம் காணச் செய்குவோம்” என்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பாடல் வரிகளுக்கேற்ப, நாம் அனைவரும்  இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன், நம் முன்னோர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்.

இந்தியத் திருநாட்டை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை வளமிக்க முன்னோடி மாநிலமாக உருவாக்கிடவும்,  அனைத்துத் தரப்பு மக்களும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து, ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் எனக் கூறி, அனைவருக்கும் எனது சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என முதலமைச்சர் ஜெயலலிதா தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.