கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – சிறு வயது முதல் பள்ளியில் ஒன்றாகப் படித்து வளர்ந்த வாசுவும், சரவணனும் ‘நண்பேன்டா’ வாக குடியும், கூத்துமாக மாறி, ஊர் சுற்றிக் கொண்டிருக்கையில், அவர்கள் வாழ்க்கையில் நுழையும் பெண்களால், நட்பில் விரிசல் விழும் நிலை ஏற்படுகின்றது. நட்பா? காதலா? என்ற சூழ்நிலை வரும் போது, இருவரும் எடுக்கும் முடிவுகள் தான் படத்தின் கலகலப்பு.
கிளைமேக்சில், திருமணத்திற்குப் பிறகு நண்பனையும், மனைவியையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது எப்படி என்று ஒரு தீர்வு சொல்கிறார்கள் அது தான் ‘வாசுவும், சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ படத்தின் ஹைலைட். (ஹப்பா என்னா கண்டுபிடிப்புடா சாமி).
‘ஆல் இன் ஆல் அழகுராஜா’விற்குப் பிறகு இயக்குநர் எம்.ராஜேஸ், மீண்டும் ஆர்யா, சந்தானம் கூட்டணியை வைத்து அதே ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ பாணியில் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். வாசுவாக சந்தானமும், சரவணனாக ஆர்யாவும் நடித்திருக்கிறார்கள்.
மது ஒழிப்பை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், படத்தின் தலைப்பை பாட்டில் மூடியில் பொறித்திருப்பது போல் டிசைன் செய்து தைரியமாக வெளியிட்டிருப்பதோடு, பெரும்பாலான காட்சிகளில் ஆர்யாவும், சந்தானமும் மது குடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் படத்தின் தொடக்கத்தில் மட்டும் பெயருக்கு “மது நாட்டிற்கும் வீட்டிற்கும் உயிருக்கும் கேடு” என்ற வாசகம் வருகிறது.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவை நீரவ் ஷாவும், இசையை டி.இமானும் கவனித்திருக்கிறார்கள்.
நடிப்பு
மீகாமன், புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களுக்குப் பிறகு ஆர்யாவை மீண்டும் கலகலப்பான கதாப்பாத்திரத்தில் பார்பதற்கு நன்றாக இருக்கிறது. நடிப்பில் நன்றாக வேறுபாடு காட்டுகின்றார். அதுமட்டுமல்லாமல் ஆர்யாவுக்கு இது 25-வது படமாம்.
சந்தானத்தின் மனைவியாகப் போகும் பானுவை இண்டர்வியூ செய்து செலக்ட் பண்ணுவது, அவர்களின் முதலிரவின் போது கட்டிலின் காலை உடைத்து வைப்பது, காதலி தமன்னாவை கலாய்த்து வெறுப்பேற்றுவது, நயந்தாரா மாதிரி பெண் வேண்டும் என்று கேட்பது என சகல சேட்டைகளையும் சகட்டுமேனிக்கு செய்திருக்கிறார் ஆர்யா.
ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார். தமன்னாவா இது ? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு ஒரு சுற்று உடல் பெருத்து, சில க்ளோசப் காட்சிகளில் மிகவும் சுமாராகத் தெரிகின்றார். இயக்குநர் அதை சுட்டிக்காட்டியிருப்பாரோ என்னவோ, அதன் பிறகான காட்சிகளில் டயட் கடைபிடித்து கொஞ்சம் உடல் மெலிந்திருப்பதைப் போல் தெரிகின்றது.நடிப்பில் வழக்கம் போல் ரசிக்க வைத்திருக்கும் தமன்னா, தனது கதாப்பாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார்.
சந்தானம் படத்தின் இரண்டாவது கதாநாயகன் தான் என்றாலும், கதாநாயகனுக்கு இணையான அழகும், திறமையும் கொண்டிருப்பதால், அவரது கதாப்பாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
“தலைவனுக்காக தொண்டனுக மொட்டியடிப்பானுக, அந்தத் தொண்டனையே மொட்டியடிக்கிறவன் தான் டா தலைவன்”, “ஆடு நனையுதுன்னு அமீர்கான் அழுகக்கூடாது” போன்ற அடுக்குமொழி வசனங்களை படம் முழுவதும் பேசி கைதட்டல்களை அள்ளுகின்றார் சந்தானம்.
அவருக்கு மனைவியாக வரும் பானுவின் கதாப்பாத்திரமும் மிகவும் ரசிக்க வைத்தது. ஒவ்வொரு முறையும் ஆர்யாவைக் கண்டு பானு எரிந்து விழுவதும், சந்தானம் அவரை சமாதானம் செய்வதுமாக கலகலப்பு சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவு, இசை, திரைக்கதை
நீரவ் ஷா ஒளிப்பதிவு அழகு. வணிக வளாகம், கடற்கரை காட்சிகள், க்ளோசப் காட்சிகள் என அனைத்தும் பளீச் ரகம். டி.இமான் பின்னணி இசையும், பாடல்களும் காட்சிகளுக்கு சரியாகப் பொருந்தியுள்ளன. ‘சோனா சோனா’ பாடல், ‘நான் ரொம்ப பிசி’ ஆகிய பாடல்கள் ரசிக்கும் ரகம்.
படம் தொடங்கியது முதல் முடிவு வரை ஏற்ற இறக்கங்கள், திருப்பங்கள், திகில், சஸ்பென்ஸ் என திரைக்கதை எந்த ஒரு கோணத்திலும் பயணிக்காமல் ஒரே நேர்கோட்டில் நகர்கிறது.
படம் முழுவதும் சந்தானமும், ஆர்யாவுமே மாறி மாறி போட்டி போட்டுக்கொண்டு காமெடி செய்வதால், சுவாமிநாதன், ஷகிலா, வித்யூலேகா என காமெடிக்கென்று சேர்க்கப்பட்ட கதாப்பாத்திரங்களால் எந்த ஒரு உபயோகமும் இல்லாமல் போய்விட்டது. மடிசாரைக் கட்டிக் கொண்டு வித்யூலேகா போடும் ஆட்டமும், சுவாமிநாதன் அன் கோ வரும் காட்சிகளும் சகிக்கவில்லை. வேண்டுமென்றே திணிக்கப்பட்ட காட்சிகள் போல் தோன்றின.
கடைசியாக, விஷால் வந்து கருத்து சொல்லி படத்திற்கு சுபம் போட்டு முடிக்கிறார். அந்தக் காட்சியில் தன் மனைவி ‘லஷ்மி’ போனில் அழைப்பதாக விஷால் கூற, அதற்கு சந்தானம் “சார் அவங்க ____லஷ்மியா? இல்ல லஷ்மி_____ ஆ?” என்று கொளுத்திப் போட்டு ஏற்கனவே விஷால் – வரலஷ்மி காதல் வதந்திக்கு இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி எரிய விட்டிருக்கிறார்.
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இது எம்.ராஜேஸ் படம் என்ற தெளிவோடு படம் பார்க்கப் போனால், சிரித்து விட்டு வரலாம். மொத்தத்தில், இது ஒரு பொழுதுபோக்குப் படம் அவ்வளவு தான்.
– ஃபீனிக்ஸ்தாசன்