புதுடில்லி, ஆகஸ்ட் 15- நாட்டின் 69-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்தியப் பிரதமர் மோடி, இன்றைய சுதந்திர தினத்தில் டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர், இந்தியா தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
“இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.நாட்டின் ஒற்றுமை குலைந்தால் மக்களின் கனவும் சீரழிந்து விடும். எக்காரணம் கொண்டும் இந்தியாவின் வலிமையும், ஒற்றுமையும், பாதிக்கப்பட்டு விடக்கூடாது.
மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும் ஏழைகளுக்கான திட்டமாகவே இருக்கும். நமது சிந்தனை- செயல் அனைத்தையும் ஏழ்மையை ஒழிப்பதில் செலவழிக்க வேண்டும். மேலும், சாதி மத பேதம் என்ற நஞ்சை முன்னேற்றம் என்ற அமிர்தம் கொண்டு முறியடிக்க வேண்டும்.
நம்மால் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க முடியும். ஊழலை ஒழிக்க மேல் மட்டத்தில் இருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியத் தேசியக் கொடியைச் சாட்சியாக வைத்துச் சொல்கிறேன். கடந்த ஓராண்டில் ஒரு ஒரு ஊழல் கூட நடைபெறவில்லை.
ஜி 20 மாநாட்டில் கருப்புப் பணத்தை மீட்க சர்வதேச உதவியை நாடினேன். கருப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கமுடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
முடிவில், இந்தியாவைத் தலைநிமிரச் செய்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.