கொழும்பு, ஆகஸ்ட் 16 – “இலங்கை அரசால் கடந்த 2009-ம் ஆண்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சாகவில்லை. அவர் திரும்பி வருவார். அவர் வரும் பொழுது தமிழ் ஈழம் மலரும்” – இப்படி கருத்துக்கள் நிறைந்த புத்தகம் ஒன்று வெளியாகி இருப்பதாக சிங்கள பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புத்தகம் தொடர்பாக, சிங்கள பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், இறுதிப் போரில் பிரபாகரன் சாகவில்லை. பிரபாகரன் சாயலில் இருந்த ஒருவரைத் தான் இலங்கை இராணுவம் கொன்றது. இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற பிரபாகரன், டெல்லியில் திரிலோனபூர் பகுதியில் இருக்கும் விடுதி ஒன்றில் ஒரு வருடம் தங்கி இருந்தார். அவர் மீண்டும் வருவார். அவர் வரும் பொழுது தமிழ் ஈழம் மலரும் என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை இராணுவத்தின் புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பிரபாகரன் தப்பிச் சென்றதாக கூறப்படுவதில் உண்மை இல்லை, அது வெறும் கட்டுக்கதை தான்’’ என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் இந்த சமயத்தில், பிரபாகரன் பற்றி செய்திகள் வெளியாகி இருப்பதால், இலங்கை தமிழர்கள் மத்தியில் கிளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதால், இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.