Home இந்தியா உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அரசு விளம்பரங்களில் ஜெயலலிதா படம்!

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அரசு விளம்பரங்களில் ஜெயலலிதா படம்!

471
0
SHARE
Ad

jayalalitha1புதுடில்லி, ஆகஸ்ட் 18- உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி, அரசு விளம்பரங்களில் ஜெயலலிதா, கெஜ்ரிவால் ஆகியோரின் படங்கள் இடம் பெறுவதாகவும், இது நீதிமன்றத்தை அவமதிப்பது போன்றதாகும் என்று என்.ஜி.ஓ. பொதுநல மனு மையத்தின் சார்பில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், “கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படுவதைக் கட்டுப்படுத்த 3 நபர் குழுவை ஏன் நியமிக்கவில்லை?” எனக் கேட்டு மத்திய அரசுக்கு வழக்குக் கடிதம்(notice) அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம், அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும். அவர்களைத் தவிர கட்சித் தலைவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

மேலும், அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் மத்திய அரசு 3 நபர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் துச்சமாக மதித்துத் தமிழக அரசு விளம்பரங்களில் ஜெயலலிதா படமும், டில்லி அரசு விளம்பரங்களில் கெஜ்ரிவால் படமும் இடம்பெற்று வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், மத்திய அரசு விளக்கம் அளிக்கக் கோரி வழக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.