லண்டன், ஆகஸ்ட் 18- உலகையே அச்சுறுத்தும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு இறந்து போன பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன், அகிம்சைவாதியான மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி நடக்குமாறு தீவிரவாதிகளுக்குச் சொன்னதாக ஒரு ருசிகரத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2001- ஆம் ஆண்டு ஒசாமா பின்லேடன் விமானத்தைக் கடத்தி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் மீது மோதி அதைத் தரைமட்டமாக்கியதால், அமெரிக்கப்படைகள் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த ஆப்கானிஸ்தான் பகுதிக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒசாமாவும் அவனது கூட்டாளிகளும் தாங்கள் தங்கியிருந்த இடத்தை விட்டு அவசர அவசரமாக வெளியேறிவிட்டார்கள்.
அந்த இடத்திலிருந்து 1500க்கும் மேற்பட்ட ஒலிப்பதிவு நாடாக்களை(கேசட்டுகளை) அதிரடிப்படையினர் கைப்பற்றினார்கள்.
அந்தக் கேசட்டுகள் பலரது கைக்கு மாறிக் கடைசியில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரபு மொழி வல்லுனரான பிளாக் மில்லர் என்பவரிடம் போய்ச் சேர்ந்தன.
அவர் அந்தக் கேசட்டில் உள்ள ஒசாம பின்லேடனின் குரல் பதிவைக் கொண்டு ‘பயமற்ற துறவி’ என்னும் தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டார்.
அதில் ஒரு பதிவில் தான் ஒசாமா, மகாத்மா காந்தி பற்றிப் பேசியுள்ளான்.
அதாவது: “சூரியனே மறையாத நாடு இங்கிலாந்து. அப்படிப்பட்ட அந்த நாடு, இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுத்துவிட்டு வெளியேறியது. அதற்குக் காரணம் இந்துவான காந்தி, இங்கிலாந்துப் பொருட்களைப் புறக்கணிக்குமாறு சொன்னதுதான்.
அதனால், அவரைப் பின்பற்றி, நாமும் அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும்” என்று பின்லேடன் கூறியுள்ளார்.
மகாத்மா காந்தியைப் பற்றிப் பின்லேடன் பேசிய இப்பேச்சு, 1993–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.