புத்ராஜெயா, ஆகஸ்ட் 19 – இனி மலேசியாவிற்கு வேலைக்காக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு முகவர்கள் (ஏஜெண்ட்) தேவையிருக்காது. காரணம் வேலைக்கான விண்ணப்பங்கள் அனைத்தையும் இணையம் மூலமாகப் பெற அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.
இது குறித்து துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி கூறுகையில், “வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு அழைத்து வருவதற்கு இணைய மேலாண்மை முறை (online management system) விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் அவர்களை அழைத்து வரத் தேவைப்படும் கால அவகாசம் குறையும்.”
“வேலைக்காக விண்ணப்பிப்பவர்களின் ஆவணங்கள், அமைச்சரவை நிர்ணயித்துள்ள கட்டுப்பாடுகளுக்குப் பொருந்தி அனைத்தும் சரியாக இருக்குமானால், 48 மணி நேரங்களில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.” என்று சாஹிட் தெரிவித்துள்ளார்.