சென்னை,ஆகஸ்ட் 19-சிலைத் திருட்டு மற்றும் கடத்தல் குற்றச்சாட்டில் கைதான இயக்குநர் வீ. சேகரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கக் காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் நடந்த வாகன சோதனையின் போது 80 கோடி மதிப்பிலான சிலைகள் சிக்கின.அதைக் கடத்தி வந்த தனவேல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிர்வாகி கைது செய்யப்பட்டார்.அவர் கொடுத்த தகவலின் பேரில் சிலைத் திருட்டு மற்றும் தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் பிரபல திரைப்பட இயக்குநர் வீ.சேகரை அதிரடியாகக் கைது செய்தனர்.இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பணத்திற்கு ஆசைப்பட்டு சிலைத் திருட்டில் ஈடுபட்டதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகச் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் அதை அவர் மறுத்ததாகத் திரையுலகினர் செய்தியாளர்களிடம் கூறினர்.
இந்நிலையில், வீ. சேகரைக் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து, எழும்பூர் இரண்டாவது கூடுதல் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் வி.சேகரை நேற்று காவல்துறையினர் ஆஜர்படுத்தினார்கள். அப்போது, அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கவேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேசமயம், வி.சேகருக்குப் பிணை வழங்கவேண்டும் என்றும் அவர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த 2 மனுக்களும் நீதிபதி சத்யா முன்பு விசாரணைக்கு வந்தன.
பிணையில் விடுவிக்கக் கோரி வி.சேகர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
அதன்பின்னர்,அவரைக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சத்யா, வீ.சேகரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
இரவு நேரங்களில் விசாரிக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தார்.
இரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது.