பாங்காக்,ஆகஸ்ட் 19- தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் பிரம்மதேவன் இந்துக் கோவிலருகே உள்ள வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் வெடித்த குண்டுவெடிப்பிற்குக் காரணமானவனின் உருவம் அங்குள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
அவன் மஞ்சள் நிற ‘டி–சர்ட்’ அணிந்திருந்தான். கையில் ஒரு பை வைத்திருந்தான். அதில் வெடிகுண்டுகளை மறைத்து எடுத்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அந்த மர்ம ஆசாமி கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த சாமி சிலைகளைப் படம் எடுத்துள்ளான். சற்று நேரம் அங்கிருந்த அவன், குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பாக வெளியேறி விட்டான்.
அந்த மர்ம நபரின் படம் வெளியிடப்பட்டுள்ளது.
அவனை வளைத்துப் பிடிக்க தாய்லாந்து காவல்துறையினர் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
“தாய்லாந்து மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இதுவாகும்” என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் யூச்சா வருத்தம் தெரிவித்துள்ளார்.