சென்னை, ஆகஸ்ட் 19- நடிகர் சங்கத் தேர்தலில் கலைஞர் கருணாநிதியின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டதாக நடிகர் விஷால் தவறான செய்தியைப் பரப்பி வருகிறார். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் 1-ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால், சரத்குமார் அணியினரும், விஷால் அணியினரும் நடிகர்- நடிகைகளைச் சந்தித்து மிகவும் மும்முரமாக ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சங்க நிர்வாகிகள் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து மூத்த உறுப்பினர் கலைஞர் கருணாநிதியின் பெயரை நீக்கிவிட்டதாக விஷால் புகார் கூறினார்.
இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், விஷாலின் குற்றச்சாட்டிற்கு நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் கே.என்.காளை பதில் தெரிவித்திருக்கிறார்.
” நடிகர் விஷால் தொடர்ந்து தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார். திமுக தலைவர் கருணாநிதியின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாக விஷால் கூறியிருப்பது தவறான செய்தியாகும்.நடிகர் சங்கத்தில் கருணாநிதி 11.03.1989 அனறு கெளரவ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார்.
கெளரவ உறுப்பினர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது எனபது சங்கத்தின் விதி. இது கருணாநிதிக்கே தெரியும்.
மேலும், இது வரை நடிகர் சங்கத் தேர்தலில் கருணாநிதி ஓட்டுப் போட்டதும் இல்லை.
இது தெரியாமல் விஷால் அணியினர் அரைவேக்காட்டுத் தனமாகப் பொய்யான தகவலைக் கூறி வருகிறார்கள். இது கண்டனத்துக்கு உரியதாகும்” என்று கூறியுள்ளார்.