கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – சீனாவில் இருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டு மிகக் குறைவான காலத்தில் முதல் குட்டியை ஈன்றதன் மூலம் கோலாலம்பூர் தேசிய மிருகக் காட்சி சாலையில் இருக்கும் இரண்டு பெரிய வகை பாண்டா கரடிகள் உலக சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(தேசிய மிருகக் காட்சி சாலையில் புதிதாகப் பிறந்துள்ள பாண்டா குட்டி)
மலேசிய விலங்கியல் சமூக பாண்டா பாதுகாப்பு மையம் மற்றும் கால்நடை சேவைகள் பிரிவுத் தலைவர் டாக்டர் மட் நாயிம் ரம்லி கூறுகையில், “வழக்கமாக இந்த வகைப் பாண்டாக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு குறைந்தது 8 முதல் 9 வருடங்கள் ஆகும். செயற்கை முறையில் கருத்தரிக்க வைத்தால் கூட அதிக காலம் தேவைப்படும்.”
“ஆனால் சீனாவை விட்டு மலேசியாவிற்கு வந்த இந்த குறைவான காலத்தில் (ஒருவருடத்திலேயே) இந்த இரண்டு பாண்டாக்களும் இணைந்து இயற்கையான முறையில் குட்டியை ஈன்றிருப்பதன் மூலம் நாம் உலக சாதனை படைத்துள்ளோம். இது சீனாவில் செய்யப்பட்டு வரும் ஆராய்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று டாக்டர் மட் தெரிவித்துள்ளார்.
மேலும், சியாங் சியாங் என்ற அந்த ஆண் பாண்டாவின் விந்தனுக்களை எடுத்து விந்து வங்கியில் சேமித்து வைப்பது குறித்து யோசித்து வருவதாகவும் டாக்டர் மட் குறிப்பிட்டுள்ளார்.